கடலூரில் நெகிழ்ச்சி சம்பவம்: தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதிய பிளஸ்-2 மாணவி
கடலூரில் தந்தை இறந்த துக்கத்திலும் மாணவி பிளஸ்-2 தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கியது. இந்த தேர்வின் கடைசி நாளான நேற்று வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடந்தது. இதில் கடலூரில் தந்தை இறந்த துக்கத்திலும் மாணவி ஒருவர் தேர்வு எழுதிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தது.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
கடலூர் பழைய வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் ஞானவேல் (வயது 45), பொம்மை செய்யும் தொழிலாளி. இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 2-வது மகள் கிரிஜா (17), கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். தற்போது நடக்கும் பொதுத்தேர்வை எழுதிய கிரிஜா, நேற்று நடக்க இருந்த வேதியியல் தேர்வுக்காக படித்து வந்தார்.
உடல்நலக்குறைவால் உயிரிழப்பு
இந்த நிலையில் நேற்று அதிகாலை ஞானவேலுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த கிரிஜா கதறி அழுதார்.
இருப்பினும் இன்று கடைசி தேர்வு நடப்பதாகவும் அதனால், தான் தேர்வு எழுத செல்ல வேண்டும் என அவர் உறவினர்களிடம் தெரிவித்தார். அதனை ஏற்றுக் கொண்ட உறவினர்கள், கிரிஜா தேர்வு எழுதி விட்டு வந்த பிறகு ஞானவேல் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.
தேர்வு எழுதிய மாணவி
அதன்படி கிரிஜாவை, உறவினர்கள் நேற்று காலை திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவி, வேதியியல் பாட தேர்வை எழுதினார். தொடர்ந்து அவருக்கு ஆசிரியர்கள் ஆறுதல் கூறினர். பின்னர் தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவியை பள்ளி முன்பு காத்திருந்த உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றதும், ஞானவேலின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
தந்தை இறந்த துக்கத்திலும் மாணவி பிளஸ்-2 தேர்வு எழுதிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.