மேய்ச்சலுக்கு சென்ற பசுவை கடித்துக்கொன்ற சிறுத்தைகள்

குடியாத்தம் அருகே மேய்ச்சலுக்கு சென்ற பசுமாட்டை 2 சிறுத்தைகள் கடித்துக்கொன்றன. தொடர்ந்து நடந்து வரும் சம்பவங்களால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

Update: 2022-11-29 18:09 GMT

குடியாத்தம் அருகே மேய்ச்சலுக்கு சென்ற பசுமாட்டை 2 சிறுத்தைகள் கடித்துக்கொன்றன. தொடர்ந்து நடந்து வரும் சம்பவங்களால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

சிறுத்தைகள் அட்டகாசம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனச்சரகம் ஆந்திர மாநில எல்லையையொட்டி 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. இந்த வனச்சரகத்தில் உள்ள காப்புக்காட்டில் யானைகள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள், காட்டுப்பன்றிகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

இந்த பகுதியில் யானைகள் அடிக்கடி கூட்டமாக விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. அதேபோல் சிறுத்தைகளும் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் நுழைந்து ஆடு, மாடுகளை கொன்று வருகின்றன.

குடியாத்தம் வனப்பகுதியில் மட்டம் 6 ஜோடி பெரிய சிறுத்தைகளும், குட்டிகளும் என 25-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த மாதம் குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டா பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்ற 2 கன்றுக்குட்டிகளை சிறுத்தைகள் கடித்துக்கொன்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்பும் சைனகுண்டா கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளான மொகிலி, கோவிந்தன், சுந்தரேசன் ஆகியோரது ஆடுகளையும் சிறுத்தைகள் கடித்து குதறி கொன்றன. ஆனால் சிறுத்தைகள் இதுவரை பிடிபடவில்லை.

பசுவை கொன்றன

இந்த நிலையில் குடியாத்தத்தை அடுத்த கொட்டமிட்டா அம்பேத்கர் நகரை சேர்ந்த விவசாயி வெங்கடேசன், தனது பசுமாட்டை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

அப்போது அங்கு அந்த பகுதிக்கு வந்த 2 சிறுத்தைகள் திடீரென பசு மாட்டை சுற்றிவளைத்தன. பசுவின் கதறல் சத்தம் கேட்டு அங்கு கிராம மக்கள் விரைந்தபோது 2 சிறுத்தைகள் பசுவை கடித்துக்கொண்டிருந்தன. கிராம மக்கள் கூச்சலிவே 2 சிறுத்தைகளும் அங்கிருந்து ஓடிவிட்டன. இதனையடுத்து கிராம மக்கள் அங்கு சென்றபோது பசு இறந்து கிடந்ததை கண்டு வேதனையடைந்தனர். தகவல் அறிந்த வேலூர் மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ் குமார், உதவி வனப் பாதுகாவலர் முரளிதரன் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா உள்ளிட்ட வனத்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கால்நடைகளை சிறுத்தைகள் கடித்துக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்வதால் விவசாயிகள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப் பிரச்சினையில் தனி கவனம் செலுத்தி சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்