மருதமலை கோவிலில் சிறுத்தை நடமாட்டம்
மருதமலை கோவிலில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்
வடவள்ளி
மருதமலை கோவிலில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
மருதமலை கோவில்
கோவையை அடுத்த மருதமலையில் 7-ம் படை வீடு என்று பக்தர்களால் அழைக்கப்படும் சுப்பிரமணிய சுவாமி கோவில் மலை மேல் உள்ளது. இந்த கோவிலில் அதிகாலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 7.30 மணி வரை திறந்து இருக்கும். மலை மற்றும் அடிவார பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அவ்வப்போது இருந்து வருகிறது.
மருதமலை கோவிலையொட்டி மலைவாழ் மக்கள் கிராமம் உள்ளது. அங்குள்ள மக்கள் வளர்த்து வரும் நாய்கள் கடந்த சில தினங்களாக மர்மமான முறையில் காணாமல் போனது. இது மலைவாழ் மக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிறுத்தை நடமாட்டம்
இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் கோவிலில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. உடனே காவலாளி சந்திரன் அங்கு சென்று பார்த்தார். அப்போது, சிறுத்தை ஒன்று நாயை கவ்விக் கொண்டு வனப்பகுதியை நோக்கி சென்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், கோவில் ஊழியர்களிடம் கூறினார்.
இதையடுத்து கோவிலில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஊழியர்கள் நேற்று காலை ஆய்வு செய்தனர். அப்போது அதிகாலை 2.20 மணி அளவில் மலை மேல் கோவிலில் தங்கரதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தின் அருகே சிறுத்தை வந்து நாயை கவ்விச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
மலை மேல் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கோவிலில் சிறுத்தை நடமாடும் வீடியோ கோவில் ஊழியர்கள், மலைவாழ் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.