சத்தியமங்கலம் அருகே மலைப்பாதையை கடந்த சிறுத்தைப்புலி

சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையை சிறுத்தைப்புலி கடந்து சென்றது. இதை கண்ட வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

Update: 2023-08-13 23:51 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் புலிகள், சிறுத்தைப்புலிகள், யானைகள், கரடிகள், மான்கள் போன்ற வனவிலங்குகள் ஏராளமாக காணப்படுகின்றன. மேலும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில்தான் 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதையும் உள்ளது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் வெளியேறி திம்பம் மலைப்பாதையை கடப்பதும், அங்குள்ள சாலையில் உலா வருவதும் வாடிக்கையாகி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை விட்டு ளெியேறிய சிறுத்தைப்புலி ஒன்று திம்பம் மலைப்பாதையின் 7-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தது. இதையடுத்து அந்த சிறுத்தைப்புலி சாலையோர தடுப்பு சுவரின் அருகே நின்றபடி சுற்றும் முற்றும் பார்த்தது.

கடந்து சென்ற சிறுத்தைப்புலி

பின்னர் திம்பம் மலைப்பாதையில் சிறுத்தைப்புலி சிறிது நேரம் உலா வந்தது. இதையடுத்து மலைப்பாதையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது. இந்த காட்சியை அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் தன்னுடைய செல்போன் மூலம் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். தற்போது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திம்பம் மலைப்பாதையை கடந்து சென்ற சிறுத்தைப்புலியால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 'தற்போது திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படாததால், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. எனவே திம்பம் மலைப்பாதையின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை கவனத்துடன் இயக்க வேண்டும்,' என அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்