2 ஆடுகளை கடித்து கொன்ற சிறுத்தை

குடியாத்தம் அருகே 2 ஆடுகளை சிறுத்தை கடித்து கொன்றது. மற்றொரு ஆட்டை வனப்பகுதிக்கு இழுத்து சென்றுவிட்டது.

Update: 2022-11-24 17:16 GMT

குடியாத்தம் அருகே 2 ஆடுகளை சிறுத்தை கடித்து கொன்றது. மற்றொரு ஆட்டை வனப்பகுதிக்கு இழுத்து சென்றுவிட்டது.

சிறுத்தைகள் நடமாட்டம்

குடியாத்தம் வனச்சரக காப்புக் காட்டில் யானைகள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள், காட்டுப்பன்றிகள் ஏராளமாக உள்ளன. குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி, அனுப்பு, துருகம், மூலகாங்குப்பம், தேவரிஷிகுப்பம், மயிலாடும்மலை, மேல்மாயில், பரதராமி அடுத்த கொட்டாளம் வனப்பகுதி, டி.பி.பாளையம், கொத்தூர், தனகொண்டபல்லி, சைன குண்டா, மோர்தானா, கொட்டாரமடுகு உள்ளிட்ட பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சிறுத்தைகள் அவ்வப்போது கிராமங்களுக்குள் புகுந்து ஆடுகளை கடித்து கொன்று வருகிறது. இந்த நிலையில 2 ஆடுகளை சிறுத்தை கொன்றுள்ளது.

2 ஆடுகளை கொன்றது

குடியாத்தம் அடுத்த சைனகுண்டா கிராமத்தைச் சேர்ந்த மொகிலி, கோவிந்தன், சுந்தரேசன் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான ஆடுகளை காலையில் மேய்ச்சலுக்கு சென்று விட்டு மாலையில் அவர்களின் வீட்டில் உள்ள பட்டிக்கு வந்து சேரும். சைனகுண்டா கிராமம் ஆந்திர- தமிழக எல்லையில் வனப்பகுதி ஒட்டியபடி உள்ளது. இந்தநிலையில் நேற்று மாலையில் சிறுத்தைகள் சைனகுண்டா கிராமத்திற்குள் புகுந்து மொகிலி மற்றும் கோவிந்தனின் ஆடுகளை கடித்து குதறி உள்ளது.

ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் வருவதற்குள் சிறுத்தைகள் தப்பி ஓடிவிட்டன. தப்பி ஓடிய சிறுத்தைகள் அதே கிராமத்தைச் சேர்ந்த சுந்தரேசன் என்பவருடைய ஆட்டை கடித்து வனப்பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளது. சிறுத்தைகள் கடித்த மொகிலி மற்றும் கோவிந்தனின் 2 ஆடுகள் சிறிது நேரத்தில் பரிதாபமாக இருந்தன.

பொதுமக்கள் அச்சம்

மாலை வேளைகளில் கிராமத்திற்குல் சிறுத்தை நுழைந்து ஆடுகளை வேட்டையாடிய சம்பவத்தால் சைனகுண்டா கிராம மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். இரவு நேரங்களில் வீடுகளுக்குள் சிறுத்தைகள் புகும் அபாயம் உள்ளதாகவும் அச்சப்படுகின்றனர். சைனகுண்டா பகுதியில் வனத்துறையின் சோதனை சாவடி உள்ளது. வனத்துறையின் ஓய்வு விடுதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஊருக்குள் சிறுத்தைகள் வராமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்