உரிமையியல்- குற்றவியல் நீதிமன்றம் விரைவில் தொடங்கப்படுமா?

கறம்பக்குடியில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் விரைவில் தொடங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

Update: 2022-12-15 18:33 GMT

கறம்பக்குடி தாலுகா

கறம்பக்குடி தாலுகாவில் 39 ஊராட்சிகள் உள்ளன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கறம்பக்குடி தாலுகாவாக உருவாக்கப்பட்டு 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இத் தாலுகாவில் கறம்பக்குடியில் சரக காவல் நிலையமும், ரெகுநாதபுரம் மழையூர் பகுதியில் காவல் நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.

கறம்பக்குடி தாலுகாவாக அறிவிக்கப்பட்டதில் இருந்து கறம்பக்குடியில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தொடங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்னும் தொடங்கப்படவில்லை.

கோரிக்கை

கறம்பக்குடி தாலுகாவை சேர்ந்தவர்கள் ஆலங்குடி நீதிமன்றத்திற்கே செல்லவேண்டிய நிலை உள்ளது. 2 தாலுகாவை சேர்ந்தவர்களுக்கு ஒரு நீதிமன்றமே இருப்பதால் நூற்றுக்கணக்கான வழக்குகள் ஆண்டுக்கணக்கில் தேங்கி கிடக்கின்றன.

இதனால் உரிமையியல் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காண பொதுமக்கள் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் காலவிரயம் ஏற்படுவதோடு விவசாயிகள், முதியவர்கள் என பலரும் சிரமம் அனுபவித்து வருகின்றனர். எனவே கறம்பக்குடியில் விரைவில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் தொடங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நீதிமன்றம் விரைவில் தொடங்க வேண்டும்

சுக்கிரன்விடுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சேதுமாதவன்:- ஒரு தாலுகாவிற்கு ஒரு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் தற்போதை காலத்திற்கு அவசியமானதாக உள்ளது. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கபட்ட நீதிக்கு சமமானதாகும். சர்ச்சைகளும் வழக்குகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்த நீதித்துறை கட்டமைப்புகள் வளர்ச்சி பெறாமல் இன்னும் அதே நிலையில் தொடர்வது வேதனையானது. எனவே கறம்பக்குடியில் நீதிமன்றம் விரைவில் தொடங்க வேண்டும்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

கறம்பக்குடி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த சரவணன்:- கறம்பக்குடி தாலுகா ரெகுநாதபுரம் பகுதியில் இருந்து ஆலங்குடி 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இப்பகுதியை சேர்ந்தவர்கள் நீதிமன்றத்திற்கு செல்ல நெடுந்தொலைவு பயணிக்க வேண்டி இருப்பதால் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

சாதாரண வழக்குகளுக்கே ஆண்டு கணக்கில் அலைந்து திரிய வேண்டிய நிலை உள்ளது. கறம்பக்குடியில் நீதிமன்றம் தொடங்குவதற்காக பேரூராட்சி சமுதாய கூடம் ரூ.20 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு தயாராக உள்ளது. எனவே கறம்பக்குடியில் விரைவில் நீதிமன்றம் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்