விளம்பர பதாகைகள் வைப்பவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை
அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் விளம்பர பதாகைகள் வைப்பவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் கோட்டாட்சியர் பழனிவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் விளம்பர பதாகைகள் வைப்பவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் கோட்டாட்சியர் பழனிவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
தஞ்சை கோட்டத்திற்குட்ட தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு மற்றும் பூதலூர் வட்டங்களில் உள்ள திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள், அச்சக உரிமையாளர்கள் ஆகியோருக்கு விளம்பர பதாகைகள், டிஜிட்டல் பேனர் வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் தஞ்சை தீர்க்க சுமங்கலி மகாலில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பழனிவேல் தலைமை தாங்கினார். தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வழிகாட்டு நெறிமுறைகள்
கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பழனிவேல் பேசுகையில், மாநகராட்சி பகுதிகளில் விளம்பர பிளக்ஸ் பேனர்கள், விளம்பர தட்டிகள், பெயர் பலகை, வாழ்த்து பேனர்கள் உள்ளிட்டவை வைக்கும் போது அரசியல் கட்சியினர், வியாபாரிகள், பொதுமக்கள் அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக விளம்பர தட்டிகள், பேனர்கள் வைக்கக்கூடாது.
அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விளம்பர பேனர்கள் வைக்க வேண்டும். விதிமுறைகளை மீறி வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களை உடனடியாக அப்புறப்படுத்துவதுடன், விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது சட்டபடி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் தஞ்சை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் அனைத்துக்கட்சி பிரமுகர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், அச்சக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.