செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா தலைமையில் நடந்தது:செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கக்கோரி மதுரையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கக்கோரி மதுரையில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-06-22 00:27 GMT


செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கக்கோரி மதுரையில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் நடைபெறும் ஊழல்கள், முறைகேடுகள், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, இதை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதன்படி மதுரை மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு மாவட்டங்கள் சார்பாக ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர். எம்.எல்.ஏ. பெரிய புள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அண்ணாத்துரை, தமிழரசன், தவசி, எஸ்.எஸ்.சரவணன், வி.ஆர்.ராஜாங்கம், பா.நீதிபதி, கருப்பையா, டாக்டர் சரவணன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:- தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களை அரசு மிரட்டுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடக்கிறது. இந்த சிகிச்சைக்கு 3 நாட்கள் ஓய்வு போதும். ஆனால் 3 மாதம் ஓய்வு என மருத்துவமனை கூறுகிறது. ஏனென்றால் செந்தில் பாலாஜியிடம் விசாரித்து யாரும் தகவல் பெறக்கூடாது என்பதற்காகதான். பார் உரிமை பணம் முதல்-அமைச்சரின் குடும்பத்திற்கு செல்கிறது. எனவேதான் மு.க.ஸ்டாலின், செந்தில் பாலாஜியை காப்பாற்றி வருகிறார் என்று பேசினார்.

லைசென்சு இல்லா பார்கள்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:- டாஸ்மாக்கில் ஒரு நாளுக்கு ஒரு கோடி பாட்டில் விற்பனையாகிறது. ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூலித்தால் நாள் ஒன்றுக்கு ரூ.10 கோடி, மாதத்திற்கு ரூ.30 கோடி, ஆண்டுக்கு ரூ.3 ஆயிரத்து 600 கோடி என 2 ஆண்டுகளில் ரூ.7 ஆயிரத்து 200 கோடி ஊழல் செய்துள்ளார் செந்தில் பாலாஜி. தமிழகத்தில் 5 ஆயிரம் பார்கள் உள்ளன. அதில் லைசென்சு இல்லாமல் 3 ஆயிரத்து 600 பார்கள் இயங்குகிறது. இந்த லைசென்சு பார்களுக்கு டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட தி.மு.க. பிரமுகர்களின் சாராய ஆலையில் இருந்து கலால் வரி கட்டாமல் மதுபாட்டில்கள் செல்கிறது. சென்னையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையை ஜனாதிபதி திறப்பார் என்றார்கள். ஆனால் ஜனாதிபதி வராததால் மு.க.ஸ்டாலினே திறந்து வைத்தார். ஏன் ஜனாதிபதி வரவில்லை என்று தெரியவில்லை.

திருவாரூரில் கட்டப்பட்ட கலைஞர் நினைவு மண்டபத்தை நிதிஷ் குமார் திறப்பார் என்றார்கள். அவருக்கு விமானம் அனுப்பி வைத்தார்கள். ஆனால் அவரும் பங்கேற்கவில்லை. ஏனென்றால் தமிழக மக்கள் ஸ்டாலின் மீது கடும் கோபத்தில் இருப்பதால், நிதிஷ் குமாரும் அதில் பங்கேற்கவில்லை. செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையிடம் வாயை திறந்தால் ஸ்டாலின் சிறைக்கு போவார். எடப்பாடி பழனிசாமி கோட்டைக்கு போவார். தி.மு.க. ஆட்சியில் தமிழகம் தலை குனிந்து இருக்கிறது என்று பேசினார்.

சிறைக்கு செல்வது...

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:- மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் படும் துன்பங்கள் தெரிகிறதா? தெரியவில்லையா?, கருணாநிதி காலம் தொட்டு தி.மு.க. பொய்யை சொல்லியே ஆட்சிக்கு வந்துள்ளது. தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. 2 மாவட்டத்தில் 25 பேர் கள்ளச்சாராயத்தால் பலியாகி உள்ளனர். முதல்-அமைச்சர் ஸ்டாலி்ன், செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டவுடன் பதற்றம் ஆகிறார். அண்ணாநகர் ரமேஷ், சாதிக் பாட்ஷா போன்றோரின் தற்கொலை போல, செந்தில்பாலாஜியின் நாடகமும் அதற்கான ஒத்திகைதான் என தோன்றுகிறது.

அமைச்சர் பி.டி.ஆர். சொன்ன ரூ.30 ஆயிரம் கோடி விவகாரம்தான் இப்படி சுற்றி சுழன்று கொண்டிருக்கிறது. செந்தில்பாலாஜி வாயை திறந்தாலும், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மனது வைத்தாலும் மு.க.ஸ்டாலின், அவருடைய குடும்பம் மீது நடவடிக்கை எடுக்கப் போவது உறுதி. இந்த ஆட்சியில் கலெக்டருக்கு கூட பாதுகாப்பு இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு அ.தி.மு.க.விற்கு புகழை சேர்க்கும்.

இவ்வாறு அவர் பேசினார். 

Tags:    

மேலும் செய்திகள்