குற்றசம்பவங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 11 இடங்களில் எல்.இ.டி. திரை - போலீஸ் கமிஷனர் தகவல்

குற்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகரில் 11 இடங்களில் எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட்டுள்ளது என போலீஸ் கமிஷனர் கூறினார்.

Update: 2023-01-09 20:33 GMT


குற்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகரில் 11 இடங்களில் எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட்டுள்ளது என போலீஸ் கமிஷனர் கூறினார்.

159 செல்போன்கள் ஒப்படைப்பு

மதுரை மாநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 3 மாதங்களில் காணாமல் போன, திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தனிப்படையினர் விசாரணை நடத்தி, தல்லாகுளம்-50, செல்லூர்-26, அண்ணாநகர்-36, மீனாட்சி அம்மன் கோவில்-12, திருப்பரங்குன்றம்-1, திருநகர்-1, அவனியாபுரம்-2, தெற்குவாசல்-2, திடீர் நகர்-19 உள்பட போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் 159 செல்போன்கனை மீட்டனர். அவ்வாறு மீட்கப்பட்ட செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கலந்துகொண்டு, ரூ.17 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- திருவிழா காலங்கள் மற்றும் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் போலீசாரின் கண்காணிப்பு பணியை எளிதாக்கும் வகையில், கண்காணிப்பு கேமராக்களுடன் கூடிய நடமாடும் சோதனைச்சாவடி உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சோதனைச்சாவடியை எங்கு வேண்டுமென்றாலும் ஓட்டிச்சென்று நிறுவிக்கொள்ளலாம். ஆயுதப்படை வளாகத்தில் உள்ளரங்க துப்பாக்கிச்சுடும் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காவல்துறை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இங்கு பயிற்சி பெற்றுக்கொள்ளலாம். ரைபிள் கிளப்புக்கு செல்ல வேண்டியது இல்லை.

நவீனமயமாக்கும்...

மாநகர காவல்துறையை நவீனமயமாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, மாநகர காவல் எல்லைப்பகுதிகளில் சூரிய சக்தி மூலம் இயங்கும் சோதனைச்சாவடிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்த சோதனைச்சாவடிகளில் கமிஷனர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது ஒரு சோதனைச்சாவடி திறக்கப்பட்டுள்ளது. விரைவில் இதர சோதனைச்சாவடிகளும் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் சோதனைச்சாவடிகளாக மாற்றியமைக்கப்படும்.

மாநகர போலீசார் மூலம் ஏற்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த புகார் தீர்வு மையம் சார்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் போலீஸ் நிலையத்தில் தேவையின்றி கூட்டம் கூடுவது, கட்டப்பஞ்சாயத்து, சட்டவிரோதமாக ஆட்களை அடைத்து வைப்பது போன்றவை தடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் நிலையங்களில் பொதுமக்களுக்கு நல்ல வரவேற்பும் அளிக்கப்படுவதால், கமிஷனர் அலுவலகத்துக்கு வரும் புகார்களும் குறைந்துள்ளன.

எல்.இ.டி. திரை

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகரின் 11 இடங்களில் எல்.இ.டி. திரை வைக்கப்பட்டு, கமிஷனர் அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு செய்திகள் மற்றும் தகவல்கள் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் சாய் பிரனீத் (சட்டம்-ஒழுங்கு), ஆறுமுகச்சாமி (போக்குவரத்து), வனிதா (தலைமையிடம்) மற்றும் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்