எழுத படிக்க தெரியாதவர்களுக்கு கற்றுக்கொடுக்க 459 இடங்களில் கற்போர் மையங்கள்-முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்

சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாத 9,183 பேருக்கு கல்வி கற்றுக் கொடுக்க 459 கற்போர் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது என்று முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து கூறினார்.

Update: 2023-09-02 19:11 GMT

சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாத 9,183 பேருக்கு கல்வி கற்றுக் கொடுக்க 459 கற்போர் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது என்று முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து கூறினார்.

கற்போர் மையம் தொடக்கம்

சாக்கோட்டையில் உள்ள எம்.சி.டி.எம்.தொடக்கப்பள்ளியில் கற்போர் மையம் தொடக்க விழா சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து தலைமையில் நடைபெற்றது. மையத்தை தொடங்கி வைத்து முதன்மை கல்வி அலுவலர் பேசியதாவது:-

2023-2024-ம் கல்வியாண்டிற்கான புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் வாயிலாக 15 வயதுக்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு வழங்க கற்போர் மையங்கள் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது

சிவகங்கை மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்க தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வி வழங்கிடும் வகையில் 'புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் 2022-27" என்ற 5 ஆண்டு வயது வந்தோர் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவர்களுக்கென கற்போர் எழுத்தறிவு மையங்கள் அனைத்து ஒன்றியங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.

அரசு உத்தரவின் படி சிவகங்கை மாவட்டத்தில் 12 ஒன்றியங்களில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாத 9,183 கற்போரைக்கண்டறிந்து 459 மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

கற்போர் மையங்களில் பயிலும் கற்போர் அனைவருக்கும் புத்தகம், எழுது பொருட்கள், வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான பாடச்செயல்பாடுகள் தன்னார்வலர்களால் தினசரி 2 மணிநேரம் செப்டம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை 6 மாதகாலம் கற்பிக்கப்பட இருக்கிறது. எனவே எழுத படிக்க தெரியாதோர் இந்த மையத்தில் சேர்ந்து கற்று கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்..

கலந்து கொண்டவர்கள்

மேலும் உதவித்திட்ட அலுவலர் பீட்டர்லெமாயு, ஒ.சிறுவயல் தொடக்கப்பள்ளி கற்போர் மையத்தையும் தொடங்கி வைத்தார்.

திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (வடக்கில்) கற்போர் மையத்தை சிவகங்கை கல்வி மாவட்டத்தின் தொடக்கக்கல்வி அலுவலர் முத்துச்சாமி, மாநில ஒருங்கிணைப்பாளர் மாயழகு தொடங்கி வைத்தார். இதில் திருப்புவனம் ஒன்றிய வட்டாரக்கல்வி அலுவலர்கள் லதா தேவி மற்றும் பால்பாண்டியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜெஸிமா பேகம், சகாய பிரிட்டோ, வட்டார வள மைய மேற்பார்வையாளர். சிவகாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்