புதுக்கோட்டை அருகே சாய்ந்து கிடக்கும் போக்குவரத்து சிக்னல் கம்பம்

புதுக்கோட்டை அருகே போக்குவரத்து சிக்னல் கம்பம் சாய்ந்து கிடக்கிறது. விபத்தை தடுக்க இதனை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-08-26 19:26 GMT

போக்குவரத்து சிக்னல் கம்பம்

புதுக்கோட்டை அருகே கட்டியாவயல் பகுதி உள்ளது. இதில் திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை பிரியும் நான்கு சாலை சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பை கடந்து தான் கவிநாடு பகுதிக்கும், அங்கிருந்து புதுக்கோட்டைக்கும் வாகனங்கள் வர வேண்டும். போக்குவரத்து அதிகமாக உள்ள இந்த சாலையில் விபத்தை தடுக்க போக்குவரத்து சிக்னல் கம்பங்கள் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு சாலையை உணர்த்தும் வகையில் சிக்னல் கம்பத்தில் உள்ள விளக்குகள் விட்டு, விட்டு ஒளிரும் தன்மை கொண்டது. இந்த நிலையில் இரு புறமும் தலா ஒரு சிக்னல் விளக்கு கம்பம் வைக்கப்பட்டு உள்ளது. இதில், ஒரு சிக்னல் விளக்கு கம்பம் கீழே விழுந்து சாய்ந்து கிடக்கிறது. அந்த சிக்னல் கம்பத்தின் மீது வாகனம் மோதியதால் சேதமடைந்து கீழே சரிந்து விழுந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.

இரும்பு தடுப்புகள்

இந்த சிக்னல் கம்பம் சாய்ந்து கிடப்பதால் அதில் விளக்குகள் ஒளிருவதில்லை. மேலும் சிக்னல் விளக்கு இல்லாததால் வாகனங்கள் வேகமாக செல்லக்கூடிய நிலை உள்ளது. எனவே இந்த சிக்னல் விளக்கு கம்பத்தை சீரமைத்து பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் வாகனங்கள் வேகமாக கடந்து செல்வதை தடுக்க இரும்பு தடுப்புகளை வைக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்