மின்கம்பத்தில் சாய்ந்தபடி செல்போனில் பேசிய வாலிபர் மின்சாரம் தாக்கி உடல் கருகினார்
மின்கம்பத்தில் சாய்ந்துகொண்டு செல்போன் பேசியபோது மின்சாரம் தாக்கி வாலிபர் ஒருவர் உடல் கருகினார்.
மொடக்குறிச்சி
மின்கம்பத்தில் சாய்ந்துகொண்டு செல்போன் பேசியபோது மின்சாரம் தாக்கி வாலிபர் ஒருவர் உடல் கருகினார்.
மின்சாரம் தாக்கியது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கருவாளூர் மேலத்தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 23). இவர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள செங்கரைபாளையத்தில் தங்கிக்கொண்டு அங்குள்ள ஒரு தறிப்பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு விஜயகுமார் தெருவில் உள்ள மின்கம்பத்தில் சாய்ந்தபடி செல்போன் பேசிக்கொண்டு இருந்தார். அவர் பேசிக்கொண்டே மின்கம்பத்தோடு இணைத்து, தரையில் பதிக்கப்பட்டு இருந்த எர்த் கம்பியை பிடித்துள்ளார். அப்போது திடீரென தீப்பொறி பறக்க அவரை மின்சாரம் தாக்கியது.
கைகள் கருகின
மின்சாரம் தாக்கியதில் விஜயகுமாருக்கு 2 கைகளும், நெஞ்சு பகுதியும் கருகியது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டார்கள். பின்னர் ஆம்புலன்சில் ஏற்றி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். டாக்டர்கள் விஜயகுமாருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மழை காலங்களில் மின் ஒயர்களில் துணி காயப்போடவேண்டாம். மின்கம்பங்களில் கயிறு கட்டவேண்டாம். மின்கம்பங்கள் அருகே நின்றுகொண்டு செல்போன் பேசவேண்டாம் என்று எத்தனையோ முன் அறிவிப்புகள் மின்வாரியத்தால் வெளியிடப்படுகின்றன. ஆனாலும் ஆபத்தை உணராமல் சிலர் இதுபோன்ற விபத்துகளில் சிக்கிக்கொள்கிறார்கள் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளார்கள்.