நெற்பயிரில் இலை கருகல் நோய் தாக்குதல்
விருத்தாசலம் பகுதியில் நெற்பயிரில் இலை கருகல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இதில் விருத்தாசலம் அடுத்த டி.வி.புத்தூர், வேட்டக்குடி, ராஜேந்திரபட்டினம் உள்ளிட்ட கிராமங்களில் ஏ.எஸ்.டி.16 என்ற ரக நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது இந்த நெற்பயிரானது பாக்டீரியா இலை கருகல் நோய் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வினைச்சல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது பற்றி அறிந்த விருத்தாசலம் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் துரைசாமி தலைமையில் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன், வேளாண் விஞ்ஞானிகள் ஜெயக்குமார், லதா, பரமசிவம், விருத்தாசலம் வேளாண்மை உதவி இயக்குனர் விஜயகுமார், வேளாண்மை உதவி அலுவலர் ராஜீவ் காந்தி ஆகியோர் கொண்ட குழுவினர் டி.வி.புத்தூர் உள்ளிட்ட பகுதியில் இலை கருகல் நோயால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கிருந்த விவசாயிகளிடம் வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் துரைசாமி கூறுகையில், இலை கருகல் நோயால் பாதிக்கப்பட்ட வயலில் உள்ள தண்ணீர் முழுவதையும் வடிகட்ட வேண்டும்.
பின்னர் ஒரு ஏக்கருக்கு புதிய மாட்டு சாணத்தை 40 கிலோ என்ற அளவில் எடுத்து 100 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைத்து வடிகட்டி மீண்டும் 200 லிட்டர் தண்ணீர் கலந்து அதனுடன் ஒட்டு திரவம் கலந்து காலை மற்றும் மாலை வேளைகளில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம்
அதனை தொடர்ந்து இரண்டு நாட்கள் கழித்து ஒரு ஏக்கருக்கு 20 கிலோ என்ற அளவில் பொட்டாஷ் உரத்தை தூவி வயலில் தண்ணீர் தேக்கிவைக்க வேண்டும். இவ்வாறு இயற்கை முறையில் இலை கருகல் நோயை கட்டுப்படுத்தலாம். அல்லது நெல் வயலில் தேங்கியுள்ள தண்ணீர் முழுவதையும் வடிகட்டி விட்டு காப்பர் ஹைட்ராக்சைடு என்ற மருந்தை ஒரு ஏக்கருக்கு 200 கிராம் என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒட்டு திரவத்தை சேர்த்து தெளிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் கழித்து ஏக்கருக்கு 20 கிலோ என்ற அளவில் பொட்டாஷ் உரத்தை தூவ வேண்டும். அதனை தொடர்ந்து வயலில் தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும். இந்த நோய் தாக்கம் உள்ள பகுதிகளில் ஒரு விவசாயி மட்டும் இந்த நோய் தடுப்பு முறைகளை செய்தால் போதாது. அனைத்து விவசாயிகளும் ஒரே நேரத்தில் இந்த முறைகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்தலாம் என்றார்.