வக்கீல்கள் கடுமையாக உழைக்க வேண்டும்
வக்கீல்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுப்பிரமணியன் பேசினார்.
காட்பாடி
வக்கீல்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுப்பிரமணியன் பேசினார்.
தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி
வேலூர் அரசு சட்டக்கல்லூரி சார்பில் மாநில அளவிலான தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி 2 நாட்கள் நடந்தது. இதில் 18 கல்லூரிகளை சேர்ந்த 53 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
இதன் நிறைவு விழா இன்று மாலை நடந்தது. கல்லூரி முதல்வர் ஜெயகவுரி வரவேற்றார்.
போட்டியில் திருச்சி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் முதல் பரிசையும், செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் 2-வது பரிசையும் பெற்றனர்.
அவர்களுக்கு பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கி சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ரா. சுப்பிரமணியன் பேசியதாவது:-
மாதிரி நீதிமன்றங்கள் தற்காலத்தில் நிறைய நடக்கிறது.
இது சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பாகும். நாங்கள் படிக்கும் போது அதுபோல இல்லை. சட்டக்கல்லூரியை விட்டு நீங்கள் வெளியே செல்லும் போது எதை நோக்கி செல்ல உள்ளீர்கள் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.
வக்கீல் என்பவர்கள் முழு நேரத்தையும் தொழிலுக்காக செயல்பட வேண்டும். தொழிலில் பக்தி இருக்க வேண்டும். வக்கீல்கள் என்றால் மூன்று நிலை உள்ளது. முதல் நிலையில் உழைப்பு அதிகமாக இருக்கும்.
இரண்டாவது நிலையில் உழைப்பும், பணமும் சமமாக கிடைக்கும். மூன்றாவது நிலையில் பணம் அதிகமாக கிடைக்கும்.
மூன்று நிலைகள்
மூன்றாவது நிலைக்கு செல்ல நாம் கடுமையாக உழைக்க வேண்டும். இப்போது ஐந்தாண்டு சட்டக்கல்லூரி படிப்பில் நிறைய படிக்க வாய்ப்பு உள்ளது. சட்டக்கல்லூரி என்பது லைசன்ஸ் தான். கற்றுக்கொள்ள நிறைய உள்ளது.
ஒரு வக்கீல் என்பவர் நீதிபதியிடம் எவ்வாறு அணுக வேண்டும் என்ற நடைமுறையை தெரிந்து கொள்ள வேண்டும். கட்சிக்காரர்களுக்கான உத்தரவை வக்கீல்கள் வாங்கித்தர வேண்டும்.
அதற்காக தவறான பாதையில் யாரும் செல்லக்கூடாது. தொழிலை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு வக்கீல் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தெரிந்து கொள்ள வேண்டும்.
நீதிபதிகளுக்கு மரியாதை
வழக்கை எப்படி நடத்துவது என்பதையும் தயார் செய்ய வேண்டும். வேலை செய்ய தயக்கம் இருக்கக்கூடாது. தற்போது வக்கீல் தொழில் நன்றாக தான் உள்ளது. வக்கீல்கள் நீதிபதிகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.
நான் வக்கீல் தொழில் செய்ய ஆரம்பித்த போது எனக்கு மாத சம்பளம் 250 ரூபாய் தான். பணம் குறைவாக கிடைக்கிறது என்பதற்காக வருத்தப்படக்கூடாது. தொழிலில் மேலே நிறைய இடம் உள்ளது. அதனை நீங்கள் நிரப்புவதற்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
தத்துவ புத்தகங்களை படிக்க வேண்டும்
தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சி.சரவணன் பேசுகையில், 'தமிழை பாடமாக படிக்க வாய்ப்பு இல்லாதவன் நான். தமிழை நானே சுயமாக கற்றுக்கொண்டேன்.
தமிழுக்கும், நீதிக்கும் பெரும் தொடர்பு உள்ளது. திருக்குறள், அகநானூறு, புறநானூறு ஆகியவற்றை படிக்க வேண்டும். தமிழில் மாதிரி நீதிமன்ற போட்டியை நடத்திய கல்லூரிக்கு எனது பாராட்டுக்கள்.
வக்கீல்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். வக்கீல்கள் நிறைய தத்துவ புத்தகங்களை படிக்க வேண்டும். வக்கீல் தொழில் என்பது ஒரு சிறந்த தொழிலாகும்' என்றார்.
நல்ல வாய்ப்புகள்
விழாவில் சட்டக்கல்வி இயக்குனர் ஜெ.விஜயலட்சுமி பேசுகையில், 'யார் அதிகமாக, கடினமாக உழைக்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் உயர்வார்கள். முன்னேறுவார்கள்.
மாணவர்களுக்கு வெற்றி, தோல்வி என்பது முக்கியமில்லை. போட்டியில் பங்கு பெற்றதே சந்தோஷம் தான். உங்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் காத்திருக்கிறது' என்றார்.
இதில் மாதிரி நீதிமன்ற குழுமத்தின் துணைத்தலைவர் கயல்விழி, முன்னாள் கல்லூரி முதல்வர் முருகதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி பேராசிரியை ரம்யா நன்றி கூறினார்.