கோர்ட்டு வளாக ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த வக்கீல்கள் கைது

மாஜிஸ்திரேட்டு வர தாமதம் ஆனதாக கூறி கோர்ட்டு வளாக ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த வக்கீல்கள் கைது.

Update: 2023-06-05 21:52 GMT

திரு.வி.க நகர்,

சென்னை வில்லிவாக்கம், 1-வது தெருவை சேர்ந்தவர் நாராயணி. இவரது இடத்தை விற்பது தொடர்பான பிரச்சினையில் ரூ.45 லட்சம் பணம் பறித்து சென்றதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் பா.ஜ.க கட்சியின் நெசவாளர் பிரிவு மாநில செயலாளர் மின்ட் ரமேஷ் தனது கூட்டாளி நாகர்கோவில் மகேஷ் என்பவருடன் கைது செய்யப்பட்டு கடந்த மே மாதம் 30-ந் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவரது கூட்டாளிகளான அம்பத்தூரைச் சேர்ந்த குலசேகரன் (வயது 44) மற்றும் ஜஸ்டின் (45) ஆகியோரை கடந்த 3-ந் தேதி போலீசார் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர். அப்போது அவருக்கு ஆதரவாக வக்கீல்களான சுந்தர்ராஜன் மற்றும் கணேஷ் மற்றும் சிலர் கோர்ட்டுக்கு சென்றனர். கோர்ட்டில் ஆஜர் படுத்த காத்திருந்தபோது குலசேகரன் ஆதரவாளர்கள் பாதுகாப்புக்கு இருந்த போலீசாரை ஆபாசமாக பேசி வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. மேலும் மாஜிஸ்திரேட்டு வர தாமதம் ஆனதாக கூறி வக்கீல்கள் கோர்ட்டு வளாகத்தில் இருந்த ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அம்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற உதவியாளர் நாகராஜன் அம்பத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வக்கீல்களான சுந்தரராஜன் மற்றும் கணேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்