வக்கீல் கழுத்தை நெரித்து கொலை

குருபரப்பள்ளி அருகே வக்கீலை மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்து தேசிய நெடுஞ்சாலையோரத்தில் காரில் போட்டு சென்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-24 18:45 GMT

குருபரப்பள்ளி

குருபரப்பள்ளி அருகே வக்கீலை மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்து தேசிய நெடுஞ்சாலையோரத்தில் காரில் போட்டு சென்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலையில் நின்ற கார்

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மேலுமலையில் தனியார் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி அருகில் சாலையோரம் கார் ஒன்று நேற்று முன்தினம் இரவு நீண்டநேரமாக நின்று கொண்டு இருந்தது. அந்த வழியாக சென்ற நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அங்கு சென்று பார்த்தனர்.

அப்போது காருக்குள் ஒருவர் வெள்ளை நிற சட்டை, வெள்ளை நிற பேண்ட் அணிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது தலை இருக்கைக்கு கீழ்புறமாகவும், கால்கள் மேல்புறமாகவும் தலைகீழாக உடல் கிடந்தது. இதுகுறித்து போலீசார் குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

வக்கீல்

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் இறந்து கிடந்த நபரின் உடலில் சோதனை செய்த போது அடையாள அட்டை இருந்தது. அதன் மூலம் அவரது பெயர் சிவக்குமார் (வயது 44), தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா பொம்மஅள்ளி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் என்றும் வக்கீல் என்றும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது கிடைத்த தகவல்கள் வருமாறு:-

சிவக்குமார் தர்மபுரி மாவட்ட கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் காலை அவர் தர்மபுரி கோர்ட்டில் பணியில் இருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர்கள், தாங்கள் கோர்ட்டுக்கு வெளியே இருப்பதாகவும், குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்தில் குட்கா வழக்கில் தங்களின் வாகனம் பிடிக்கப்பட்டுள்ளது. அந்த வாகனத்தை மீட்டு தர உதவ வேண்டும் என்று அவரிடம் கேட்டுள்ளனர்.

டீ குடித்தனர்

அப்போது சிவக்குமாரும் தான் குருபரப்பள்ளி போலீஸ் நிலையம் வந்து வாகனத்தை மீட்டு தருகிறேன் என அந்த நபர்களிடம் கூறினார். இதையடுத்து காரில் வக்கீல் சிவக்குமாரும், அவரது ஜூனியர் வக்கீல்கள் அருள், கோகுல கண்ணன் மற்றும் குட்கா வாகனத்தை எடுத்து தர கேட்டுக் கொண்ட 2 நபர்களும் ஏறினார்கள். கார் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே வந்தது.

அங்கு டீக்கடை ஒன்றில் காரை நிறுத்திய வக்கீல் சிவக்குமார் அவர்களுடன் சேர்ந்து டீ குடித்துள்ளார். அப்போது வக்கீல் சிவக்குமாருடன் வந்த 2 நபர்கள், தங்களின் சகோதரர், வாகனம் தொடர்பான ஆவணங்களுடன் குருபரப்பள்ளி அருகே இருப்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து சிவக்குமார் தனது ஜூனியர் வக்கீல்கள் 2 பேரையும் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் ஒரு டீக்கடையில் இறக்கி விட்டு விட்டு சிறிது நேரத்தில் வருவதாக கூறி அந்த நபர்களுடன் காரில் சென்றார்.

செல்போன் சுவிட்ச் ஆப்

இதனிடையே வெகுநேரமாகியும் வக்கீல் சிவக்குமார் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது ஜூனியர் வக்கீல்கள் சிவக்குமாருக்கு போன் செய்தனர். அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அவர்கள் தர்மபுரிக்கு வந்து தனது நண்பர்கள் மற்றும் சிவக்குமாரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் சிவக்குமாரை தேடி வந்தனர்.

இந்நிலையில் தான் மேலுமலை அருகில் சிவக்குமாா் காரில் பிணமாக கிடந்ததை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் கண்டுபிடித்துள்ளனர் என்ற திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

கழுத்தை நெரித்து கொலை

மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் காரில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். அதே போல தடயவியல் நிபுணர்களும் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் போலீஸ் மோப்ப நாய் அங்கு வரவழைக்கப்பட்டது. அது இறந்து கிடந்த சிவக்குமாரின் உடலை மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து போலீசார் சிவக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் இறந்து கிடந்த காரை விசாரணைக்காக குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக சிவக்குமாரின் மனைவி வனிதா குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே நேற்று இறந்து போன வக்கீல் சிவக்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

உறவினர்கள் போராட்டம்

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட வக்கீல் சிவக்குமாரின் உறவினர்கள் நேற்று காலை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு திரண்டனர். அவர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வக்கீல் சிவக்குமாரை கொலை செய்த நபர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையிலும், ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையிலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். வக்கீல் சிவக்குமார் கொலை தொடர்பாக குற்றவாளிகளை பிடிப்பதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என தெரிவித்தார்.

பெரும் பரபரப்பு

இதைத் தொடர்ந்து வக்கீல் சிவக்குமாரின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு, உடலை பெற்று சென்றனர். இதனால் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குருபரப்பள்ளி அருகே வழக்கு விசாரணை தொடர்பாக வந்த தர்மபுரி வக்கீலை கழுத்தை நெரித்து கொலை செய்து காரில் உடலை போட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்