லெமூர் கடற்கரையில் கடலில் மூழ்கி வக்கீல் பலி

லெமூர் கடற்கரையில் கடலில் மூழ்கி வக்கீல் பலியானார். குடும்பத்தினருடன் சுற்றுலா வந்த இடத்தில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

Update: 2022-06-18 19:08 GMT

ராஜாக்கமங்கலம்,

லெமூர் கடற்கரையில் கடலில் மூழ்கி வக்கீல் பலியானார். குடும்பத்தினருடன் சுற்றுலா வந்த இடத்தில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

மேலும் இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

வக்கீல்

நெல்லை பாளையங்கோட்டையை அடுத்த சாந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட் ஜார்ஜ் (வயது 55). வக்கீலான இவர் வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்தார். இவர் நேற்று குமரி மாவட்ட சுற்றுலா தலங்களை சுற்றி பார்ப்பதற்காக குடும்பத்துடன் வந்தார்.

முதலில் தேவசகாயம் மவுண்ட் பகுதிக்கு சென்ற அவர்கள் பிறகு கன்னியாகுமரியில் பல இடங்களை சுற்றி பார்த்தனர். மாலையில் லெமூர் கடற்கரைக்கு சென்று உற்சாகமாக பொழுதை போக்கினர்.

கடலில் மூழ்கி சாவு

அப்போது ஆர்வமிகுதியில் ஆல்பர்ட் ஜார்ஜ் கடலில் குளித்து கொண்டிருந்தார். இந்தநிலையில் கடற்கரையை நோக்கி சீறிபாய்ந்த ராட்சத அலையில் அவர் சிக்கினார். கண்ணிமைக்கும் நேரத்தில் கடல் அலை அவரை உள்ளே இழுத்து சென்றது.

அப்போது அங்கு நின்றவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. பின்னர் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா வந்த இடத்தில் வக்கீல் கடலில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்