கோவையில் பாஜக சார்பில் நடக்கும் பந்த்-க்கு தடை கோரிய வழக்கு; சென்னை ஐகோர்ட்டில் இன்று பிற்பகல் விசாரணை

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் நடக்கும் பந்த்-க்கு தடை கோரிய மனு இன்று பிற்பகல் விசாரிக்கப்படும் என ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.

Update: 2022-10-28 06:23 GMT

சென்னை,

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23-ம் தேதியன்று அதிகாலை கார் வெடித்துச் சிதறியது. அதில் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். கார் வெடித்து சிதறிய இடத்தில் ஆணிகள், கோழிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

இது குறித்து உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முபினிடம், 2019-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தியது தெரியவந்தது. இதனால் இவ்வழக்கிற்காக 6 தனிப்படைகள் அமைக்கபட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து, கார் வெடிப்பு வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான் ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீதும் உபா சட்டம் பாய்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.

இதற்கிடையே, கோவை கார் வெடிப்பு சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் வருகிற 31-ந் தேதி பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பாஜக சார்பில் நடைபெற உள்ள பந்த்-க்கு தடைவிதிக்க கோரி வெங்கடேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நலமனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், முழுஅடைப்பு தேவையில்லாதது என்றும், இதனை காரணம் காட்டி கடைகளை மூடும்படி நெருக்கடி அளிப்பதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவரச வழக்காக விசாரிக்க கோரி நீதிபதிகள் முன் முறையிடப்பட்டது. இதனையடுத்து ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பிற்பகல் 12.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துகொள்வதாக தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்