கார் கவிழ்ந்து சட்டக்கல்லூரி மாணவர் பலி

கொடைரோடு அருகே, கார் கவிழ்ந்து சட்டக்கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-07-12 16:39 GMT

சட்டக்கல்லூரி மாணவர்

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கீழஉரப்பனூரை சேர்ந்தவர் சாமிநாதன். அவருடைய மகன் விஷ்வா (வயது 21). இவர், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் 2-ம் ஆண்டு சட்டப்படிப்பு படித்து வந்தார். அவருடைய தோழி கோமதி லட்சுமி (18). டி.கல்லுப்பட்டியை சேர்ந்த இவர், மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று இவர்கள் 2 பேரும் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் உள்ள விஷ்வாவின் நண்பர் இல்ல விழாவுக்கு காரில் வந்தனர். பின்னர் மீண்டும் அவர்கள் திருமங்கலம் நோக்கி திரும்பி கொண்டிருந்தனர். காரை, உரப்பனூரை சேர்ந்த மதன்குமார் (23) ஓட்டினார்.

பரிதாப சாவு

திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில், பள்ளப்பட்டி பிரிவு அருகே மாலை 4.15 மணி அளவில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கனமழை பெய்து கொண்டிருந்தது. இதில் நிலைதடுமாறிய கார் தாறுமாறாக ஓடியது. ஒரு கட்டத்தில் சாலையோரத்தில் உள்ள ஓடைக்குள் கார் பாய்ந்தது.

பின்னர் அந்த கார் மீண்டும் மேலே சாலையில் ஏறி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விஷ்வா, காருக்குள்ளேயே சிக்கி பரிதாபமாக இறந்தார்.

படுகாயம் அடைந்த கோமதி லட்சுமி, மதன்குமார் ஆகியோர் காயம் அடைந்தனர். விபத்தில் சிக்கிய அவர்கள் அபயகுரல் எழுப்பினர். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீவிர சிகிச்சை

இதுகுறித்து தகவல் அறிந்த அம்மையநாயக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ேசக் அப்துல்லா தலைமையிலான போலீசாரும், நிலக்கோட்டை தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்தனர். இடிபாடுக்குள் சிக்கிய விஷ்வாவின் உடலை ஒரு மணி போராடி மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தில் சிக்கிய கோமதி லட்சுமி, மதன்குமார் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கோமதி லட்சுமி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

---------

Tags:    

மேலும் செய்திகள்