முத்தையாபுரத்தில் சட்டக்கல்லூரி மாணவர் மீது தாக்குதல்
முத்தையாபுரத்தில் சட்டக்கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்திய நான்கு பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
ஸ்பிக் நகர்:
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜா சங்கரவேல். இவரது மகன் மாடக்கண் (வயது 23). இவர் செங்கல்பட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன் தினம் இரவு 7 மணிக்கு முத்தையாபுரம் முனியசாமி கோவில் தெருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, உலக முத்து என்பவரின் மகன் முத்து சேதுபதி திடீரென்று மாடக்கண் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தியுள்ளார். உனது அண்ணன் பாலமருது, எனது நண்பர் அஜித்திற்கு பார்த்த பெண்ணை கூட்டி கொண்டு போய் விட்டான் என்று சந்தோஷத்தில் இருக்கிறாயா? என்று கூறி அவதூறாக பேசி அவரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அந்த பகுதியில் உள்ளவர்கள் அவர்களை சத்தம் போடவும் அங்கிருந்து இருவரும் சென்று விட்டனர். பின்பு இரவு 11 மணியளவில் மாடக்கண் அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது முத்துேசதுபதியின் உறவினர்களான சத்யராஜ், இசக்கி ராஜ், சாண்டி ஆகியோர் அவரிடம் தகராறு செய்து தாக்கியுள்ளனர். தாக்குதலில் காயம் அடைந்த அவரின் அலறல் சப்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். இதை பார்த்த அவர்கள் கத்தியை காட்டி மிரட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனராம். இது குறித்த புகாரின் பேரில் முத்துசேதுபதி, சத்யராஜ், இசக்கிராஜ், சாண்டி ஆகிய 4 பேர் மீதும் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், சப்- இன்ஸ்பெக்டர் மகாராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.