போடிப்பட்டி
மடத்துக்குளத்தையடுத்த சாமராயப்பட்டியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள பொது சுகாதார வளாகத்தை அகற்றாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தவுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
சாலை ஆக்கிரமிப்பு
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
சாமராயப்பட்டி அம்மன் கோவில் வீதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டாலும் பெருமளவு போக்குவரத்து இல்லாத அன்றைய நிலையில் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் தற்போது இந்த பகுதியில் கோழிப்பண்ணை, விளைநிலங்கள், குடியிருப்புகள் என பெருமளவு மேம்படுத்தப்பட்டுள்ளது.இதனால் தற்போது அதிக அளவில் வாகனங்கள் சென்று வரும் இந்த சாலையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ள பொது சுகாதார வளாகம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.
காத்திருப்பு போராட்டம்
குறிப்பாக விவசாயிகள் தங்கள் விளைபொருட்கள், அறுவடை எந்திரங்கள் மற்றும் கால்நடை தீவனப் பொருட்களை கொண்டு செல்லவும், கோழிப்பண்ணை வாகனங்கள் சென்று வரவும் இடையூறாக உள்ளது. இந்த குறுகலான சாலையால் சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள பொது சுகாதார வளாகத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மூலம் மனு அளித்துள்ளோம்.ஆனால் பல மாதங்கள் கடந்த நிலையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை'என்று விவசாயிகள் கூறினர்.இந்தநிலையில் வரும் 22-ந் தேதி குமரலிங்கம் பேரூராட்சி அலுவலகம் முன் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், பொது சுகாதார வளாகத்தை அகற்றக் கோரி தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.அதன்பிறகும் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
---------------
2 காலம்
பொதுசுகாதார வளாகத்தால் குறுகிய சாலையில் சிரமத்துடன் செல்லும் வாகனத்தை படத்தில் காணலாம்.