செல்போன் காலதாமதமாக கோர்ட்டில் சமர்ப்பிப்பு: போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
செல்போன் காலதாமதமாக கோர்ட்டில் சமர்ப்பிப்பு: போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -டி.ஜி.பி.க்கு ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
தமிழ்நாடு பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் சவுதாமணி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கோவில் இடிப்பு தொடர்பாக ஒரு பதிவை வெளியிட்டார். அதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது செல்போனை பறிமுதல் செய்தனர். அதை திரும்ப ஒப்படைக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் சவுதாமணி மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார். அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜராகி வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.வேல்முருகன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மனுதாரரிடம் இருந்து கடந்த ஜூலை 9-ந்தேதி பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், விசாரணை கோர்ட்டில் கடந்த ஆகஸ்டு 12-ந்தேதிதான் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தடயவியல் ஆய்வு முடிந்த பின்னர் அதை கேட்டு கீழ்கோர்ட்டில் மனுதாரர் மனு தாக்கல் செய்யலாம். அதேநேரம், குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் இதுபோன்ற பொருட்களை உடனடியாக விசாரணை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. எனவே, காலதாமதமாக செல்போனை கோர்ட்டில் ஒப்படைத்த இந்த வழக்கின் விசாரணை அதிகாரி மீது டி.ஜி.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுகுறித்த அறிக்கையை 26-ந்தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.