கடந்த ஆண்டு 270 பேர் குண்டர் சட்டத்தில் கைது-தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 270 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்தார்.

Update: 2023-02-04 18:45 GMT

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 270 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்தார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சார்பில் 'போதை இல்லா பாதை, இடைநின்ற பள்ளி மாணவர்கள் சேர்க்கை' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவில்பட்டியில் நேற்று நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-

ஊர் அமைதியாக இருந்தால், கல்வி நிறுவனங்கள், தொழில் வளம் பெருகும். வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். இதனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். இதன் மூலம் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நாங்கள் விளைவுகளை எடுத்துக் கூறுகிறோம். யார் மீதும் வழக்குப்பதிவு செய்து அவரது வாழ்க்கையை மாற்றி எழுத விரும்ப வில்லை. ஆனால் வழக்குப்பதிவு செய்யாத வகையில் நடக்க வேண்டியது மக்களின் கடமையாகும்.

குண்டர் சட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு 270 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடித்தனத்தை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இளம் சிறார்கள் பள்ளிக்கு செல்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். படிக்க முடிந்த அளவுக்கு படிக்க வேண்டும். இன்று படிப்பை தவற விட்டால் பின்னால் அது கிடைக்காது. ஆசிரியர்கள் கண்டித்தால் பயப்பட வேண்டாம். அவர்களது கண்டிப்பு நம்மை மேலும் உயர்த்தும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி கொடுப்பது பெற்றோரின் கடமையாகும். போதை பொருட்கள் இல்லாத கிராமங்களை உருவாக்க வேண்டும். கஞ்சா விற்பனை தொடர்பாக தகவல் தெரிந்தால் 83000 14567 என்ற செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நோட்டு, புத்தகங்கள்

தொடர்ந்து கோவில்பட்டி உட்கோட்டத்துக்கு உட்பட்ட பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து, நோட்டு புத்தகங்களை வழங்கப்பட்டது. மேலும் இலுப்பையூரணி ஊராட்சி தலைவர் செல்வி சந்தனத்துக்கு, ஊராட்சியில் வைப்பதற்காக போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பதாகையும், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மரக் கன்றுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர்கள் சுஜித் ஆனந்த், கிங்ஸ்லி தேவானந்த், பத்மாவதி, பாஸ்கரன் மற்றும் போலீசார், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்