கொடைரோடு அருகே மண் அள்ளி வந்த லாரி சிறைபிடிப்பு

கொடைரோடு அருகே மண் அள்ளி வந்த லாரியை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.

Update: 2023-01-23 16:14 GMT

கொடைரோடு அருகே சிறுமலை அடிவார பகுதிகளில் கிழக்குத்தோட்டம் சாத்தாகோவில்பட்டி பகுதிகளில் அரசு அனுமதியின்றி, தனியார் தோட்டங்களில் இருந்து லாரிகளில் மண் அள்ளி செல்வதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.1 கோடி செலவில் அமைக்கப்பட்ட தார்சாலை சேதம் அடைந்ததாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். இந்தநிலையில் இன்று ஆத்திரமடைந்த கிராம மக்கள் கிழக்குத்தோட்ட பகுதிகளில் மண் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த அம்மையநாயக்கனூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சாலைகளை சேதப்பத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி, லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையம் சென்றனர். அங்கு பறிமுதல் செய்த லாரியை காணவில்லை. இதையடுத்து போலீஸ்நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்