தேசிய நெடுஞ்சாலையில் மண்ணரிப்பு ஏற்பட்டு விரிசல்

நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கான்கடையில் மண்ணரிப்பு ஏற்பட்டு விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பெரும் விபத்து ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-05 18:45 GMT

அழகியமண்டபம்,


நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கான்கடையில் மண்ணரிப்பு ஏற்பட்டு விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பெரும் விபத்து ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முடங்கி கிடக்கும் பணி

நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் சுங்கான்கடை அருகே உள்ள அக்கினம்குளம் பகுதியில் சாலை விரிவாக்கப்பணிக்காக தடுப்பு சுவர் கட்டும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த பணிக்காக அக்கினம்குளத்தில் இருந்து மற்றொரு குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த மடை உடைக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் தற்போது சாலை விரிவாக்க பணி நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

சாலையில் விரிசல்

இதனால் சாலை விரிவாக்கப்பணி நடைபெறும் பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த பகுதியில் தற்போது மழை பெய்து வரும் நிலையில் மண்ணரிப்பு மேலும் அதிகமாகி சாலையில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான கனரக வாகனங்கள், அரசு பஸ்கள் செல்கின்றன. இந்தநிலையில் சாலையில் விரிசல் ஏற்பட்டு வருவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். மேலும் குமரி மாவட்டத்தில் தற்போது பருவமழை பெய்து வரும் நிலையில் மண்ணரிப்பு மேலும் அதிகமாகி சாலை உடைந்து பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, சாலையில் ஏற்பட்டுள்ள மண்ணரிப்பை சரி செய்வதுடன், முடங்கி கிடக்கும் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்