குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே ரெயில் பாதையில் மண் சரிவு

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மலை ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக குன்னூருக்கு வந்தது.

Update: 2022-11-15 21:02 GMT

குன்னூர்,

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் குன்னூர் பகுதியில் பரவலாக மழை பெய்தது. தொடர் மழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் ரெயில் பாதையில் ஹில்குரோவ்-ஆடர்லி ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று திடீரென மண்சரிவு ஏற்பட்டது. தண்டவாளத்தில் செடிகளுடன் மண் விழுந்து கிடந்தது. மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு குன்னூரை நோக்கி மலை ரெயில் வந்து கொண்டிருந்தது. ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது குறித்து ஆடர்லி ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து மலை ரெயில் ஆடர்லி அருகே நிறுத்தப்பட்டது. பின்னர் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தண்டவாளத்தில் விழுந்த மண்ணை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மலை ரெயில் தாமதம்

இதனால் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் மலை ரெயில் அங்கிருந்து குன்னூரை நோக்கி புறப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். வழக்கமாக குன்னூரை காலை 10.30 மணிக்கு வந்தடையும். மண் சரிவு காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக மலை ரெயில் குன்னூருக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து ஊட்டிக்கு சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்