தூத்துக்குடியில் நிலம் மோசடி செய்தவர் கைது
தூத்துக்குடியில் போலி ஆவணங்கள் மூலம் நிலம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் போலி ஆவணங்கள் மூலம் நிலமோசடி செய்தவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
மோசடி
தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் சங்கரநாராயணன். இவர் சங்கரப்பேரி பகுதியில் 1987-ம் ஆண்டு 9.51 சென்ட் நிலம் வாங்கினாராம். இந்த நிலத்துக்கான பட்டா பெறாமல் இருந்து உள்ளார். இதனால் அந்த இடம் முதன் முதலாக கிரையம் பெற்று இருந்த சீராளன் என்பவர் பெயரில் இருந்து உள்ளது. இதனை அறிந்த சீராளனின் மனைவி சமுத்திரவள்ளி, மகள்கள் ஜெயசுதா, காயத்ரி, மகன் ராம் மனோகர் ஆகியோர் சிலருடன் கூட்டு சேர்ந்து, அந்த நிலத்தை போலியாக பாகவிடுதலை ஆவணங்கள் உருவாக்கி உள்ளனர். அதனை பயன்படுத்தி அந்த இடத்தில் ஒரு பகுதியான 5.32 சென்ட் நிலத்தை டூவிபுரத்தை சேர்ந்த தாளமுத்து என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்து உள்ளனர். மீதம் உள்ள 3.91 சென்ட் நிலத்தை முள்ளக்காட்டை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு பொது அதிகாரம் அளித்து சொத்தை மோசடியாக அபகரித்து உள்ளனர்.
கைது
இதனை அறிந்த சங்கரநாராயணன் தனது நிலத்தை மோசடியாக அபகரித்து இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலி ஆவணம் மூலம் நிலம் மோசடி செய்ததாக ராம்மனோகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.