ஐகோர்ட்டு தீர்ப்பை போலியாக தயாரித்து நில மோசடி: தந்தை-மகனுக்கு 6 ஆண்டு ஜெயில்
ஐகோர்ட்டு தீர்ப்பை போலியாக தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட தந்தை-மகனுக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
ஐகோர்ட்டு தீர்ப்பை போலியாக தயாரித்து நிலமோசடியில் ஈடுபட்ட தந்தை, மகனுக்கு தலா 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.
கம்ப்யூட்டர் என்ஜினீயர்
தூத்துக்குடி அருகே உள்ள வடக்கு சிலுக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சு.சீனி செல்வராஜ் (வயது 64). இவரது மகன் லட்சுமண குமார் (29). எம்.இ. கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படித்து உள்ளார். இவர் ஆந்திராவில் உள்ள ஒரு கல்லூரியில் பணியாற்றி வருகிறார். சீனி செல்வராஜின் உறவினர் ஒருவருக்கு சொந்தமான 45 செண்ட் நிலம் அந்த பகுதியில் உள்ளது. அந்த உறவினர் இறந்து விட்டதாலும், அவருக்கு வாரிசுகள் இல்லாததாலும், அந்த நிலம் சீனி செல்வராஜ் மற்றும் அவரது சகோதரர்களுக்கு பாத்தியப்பட்டதானது.
போலி தீர்ப்பு நகல்
இந்த நிலையில், சீனி செல்வராஜ் மற்றும் அவரது மகன் லட்சுமண குமார் ஆகிய 2 பேரும் சேர்ந்து, அந்த நிலத்தை முழுவதும் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்காக அவர்கள், 4 வாரங்களில் இந்த நிலத்தின் கூட்டுப்பட்டாவில் சீனி செல்வராஜ் பெயரை சேர்க்க வேண்டும்' என ஐகோர்ட்டு மதுரை கிளை தீர்ப்பளித்தது போன்று போலியாக ஒரு ஆன்லைன் தீர்ப்பு நகலை தயாரித்தனர். இதற்காக ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கின் எண்ணை பயன்படுத்தி உள்ளனர்.
மோசடி
இந்த நகலை வடக்கு சிலுக்கன்பட்டி கிராமநிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கொடுத்து கூட்டுப்பட்டாவில் சீனிசெல்வராஜ் பெயரை சேர்த்து உள்ளனர். பின்னர் அந்த நிலத்தை சீனி செல்வராஜ், தனது மகன் லட்சுமணகுமார் பெயருக்கு தானபத்திரம் எழுதி கொடுத்து உள்ளார். இந்த நிலையில் சீனி செல்வராஜின் உறவினர் ஒருவர், ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளார்.
அப்போது இதுபோன்ற ஒரு தீர்ப்பை ஐகோர்ட்டு வழங்கவில்லை என்பதும், அதில் குறிப்பிடப்பட்ட எண் நிலுவையில் உள்ள வழக்கின் எண் என்பதும் நீதிபதிகளுக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து வடக்கு சிலுக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் திருவரங்கசெல்வி தட்டப்பாறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அப்போதைய தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் விசாரணை நடத்தினார். விசாரணையில், சீனி செல்வராஜ் மற்றும் அவரது மகன் லட்சுமண குமார் ஆகிய 2 பேரும் சேர்ந்து ஐகோர்ட்டு தீர்ப்பு ேபான்று போலியாக ஒரு உத்தரவை தயாரித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து தட்டப்பாறை போலீசார் அந்த 2 பேரையும் கைது செய்தனர்.
6 ஆண்டு ஜெயில்
இவர்கள் மீது தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு வி.சி.குபேரசுந்தர் குற்றம் சாட்டப்பட்ட சீனிசெல்வராஜ் மற்றும் அவரது மகன் லட்சுமண குமார் ஆகிய 2 பேருக்கும் தலா 6 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு உதவி வக்கீல் வி.முருகபெருமாள் ஆஜரானார்.