நிலம் வாங்குபவர்கள், விற்பவர்கள் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு பணம் கொண்டு வரக்கூடாது-ராமநாதபுரத்தில் அமைச்சர் மூர்த்தி பேட்டி

பத்திர பதிவு அலுவலகங்களுக்குள் இடைத்தரகர்கள், பத்திர எழுத்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரத்தில் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

Update: 2023-06-24 18:45 GMT

பத்திர பதிவு அலுவலகங்களுக்குள் இடைத்தரகர்கள், பத்திர எழுத்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரத்தில் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

ஆய்வுக்கூட்டம்

ராமநாதபுரத்தில் வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை மண்டல அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அலுவலர்கள், மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர்கள், சார் பதிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசும் போது,

வணிகவரி மற்றும் பதிவுதுறையின் சார்பில் சிறந்த முறையில் செயல்பட்டு இலக்கை விட கூடுதலாக அரசுக்கு வரவேண்டிய வருவாயினை பெற்று தரப்படுகின்றன. கடந்த ஆண்டு ரூ.18,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கணினி மூலம் பத்திரப்பதிவு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கான பயிற்சிகள் மண்டலம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

இந்த கூட்டத்தில் பதிவுத்துறை கூடுதல் தலைவர் ஜாபர் சாதிக், மண்டல அலுவலர் செந்தமிழ் செல்வன், ராமநாதபுரம் மாவட்ட பதிவு அலுவலர் ரத்தினவேல், சார் பதிவாளர் சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

போலி பத்திரங்கள் கிடையாது

இதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த திட்டங்கள், அறிவிக்காத திட்டங்களுக்கு நிதியை பெருக்கித்தரக்கூடிய துறையாக வணிகவரித்துறையும் பத்திரப்பதிவுத்துறையும் உள்ளது. கடந்த காலத்தில் வரலாறு காணாத அளவிற்கு ரூ.17 ஆயிரத்து 374 கோடி அளவுக்கு வருவாயை பதிவுத்துறை ஈட்டி உள்ளது. இந்த ஆண்டு பதிவுத்துறை மட்டும் ரூ.25 ஆயிரம் கோடி வருவாயை ஈட்டித்தரக்கூடிய நிலையில் உள்ளது. தற்போது போலி பத்திரங்கள் என்பதே கிடையாது.

கடந்த காலங்களில் புழக்கத்தில் இருந்த போலி பத்திரங்கள் குறித்த புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பத்திர பதிவில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆதாரத்துடன் புகார் தெரிவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பணம் கொண்டு வரக்கூடாது

நிலம் வாங்குபவரோ விற்பவரோ பத்திர பதிவு அலுவலகத்திற்கு வரும்போது பணம் கொண்டுவரக்கூடாது. ஏனெனில் அனைத்து பண பரிவர்த்தனைகளும் ஆன்லைன் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.

பத்திரப்பதிவு நடவடிக்கையில் அதிகாரிகள் உள்பட யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பத்திர பதிவு அலுவலகங்களில் இடைத்தரகர்கள், ஆவண எழுத்தர்கள் யாரும் செல்லக்கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பத்திரபதிவு செய்பவர்கள் மட்டுமே நேரில் வரவேண்டும். அவர்களிடம் மட்டுமே பத்திரங்களை வழங்க வேண்டும். ஆவண எழுத்தர்கள் பத்திர பதிவு அலுவலகங்களுக்கு யாருடைய பத்திர பதிவுக்கும் வரக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவிடப்பட்டுள்ளது. ஆவண எழுத்தர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்து விதிகளை ஏற்றுக்கொண்டு தேர்வு எழுதிய பின்னர்தான் அவர்களுக்கு உரிமம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்