நிலம் கையகப்படுத்தும் பணி மீண்டும் தொடக்கம்

பொள்ளாச்சி- திண்டுக்கல் நான்கு வழிச்சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி மீண்டும் தொடங்கியது. இதனால் மரங்கள், வீடுகள் அகற்றப்பட்டன.

Update: 2023-07-04 18:45 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி- திண்டுக்கல் நான்கு வழிச்சாலை பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி மீண்டும் தொடங்கியது. இதனால் மரங்கள், வீடுகள் அகற்றப்பட்டன.

நிலம் கையகப்படுத்தும் பணி

பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல் வரை மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் ரூ.3 ஆயிரத்து 649 கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது.

திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம், ஒட்டன்சத்திரம் - மடத்துக்குளம், மடத்துக்குளம் - பொள்ளாச்சி என 3 பிரிவுகளாக பிரித்து 165 கிலோ மீட்டர் தூரத்துக்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்படு கிறது. இதில் 120 கிலோ மீட்டர் தூரத்துக்கு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது.

இந்த நிலையில் பொள்ளாச்சி பகுதிகளில் சில விவசாயிகள் ஆவணங்களை கொடுக்காததால் நிலம் கையகப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தாலுகா அலுவலகத்தில் கூட்டம் நடத்தி ஒரு வாரத்துக் குள் ஆவணங்களை கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டது.

தென்னை மரங்கள் அகற்றம்

இதையடுத்து விவசாயிகளிடம் இருந்து ஆவணங்கள் பெறப்பட் டது. அதை சரி பார்த்து ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சி பெரியா கவுண்டனூரில் நிலம் கையகப்படுத்தும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது.

மேலும் போலீஸ் பாதுகாப்புடன் தென்னை மரங்களை வெட்டி அகற்றினர். இது போல் வீட்டையும் இடித்து அகற்றும் பணி நடைபெற்றது.

அப்போது விவசாயிகள் வீட்டில் இருந்த பொருட்களை தாமாகவே முன்வந்து எடுத்து சென்றனர். தோட்டங்களில் கட்டி வைக்கப்பட்டு இருந்த மாடு, கோழி உள்ளிட்டவைகளை வேறு பகுதிக்கு கொண்டு சென்றனர். தென்னை மரங்களை வெட்டுவதை பார்த்து விவசாயிகள் கண் கலங்கி நின்றது பரிதாபமாக இருந்தது.

80 சதவீத பணிகள் நிறைவு

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:-

திண்டுக்கல்- ஒட்டன்சத்திரம்- கமலாபுரம் இடையே 320 ஹெக்டேர், ஒட்டன்சத்திரம்- மடத்துக்குளம் இடையே 287 ஹெக்டேர், மடத்துக்குளம்-பொள்ளாச்சி இடையே 323 ஹெக்டேர் நிலமும் கையகப்படுத்தப்படுகிறது. பொள்ளாச்சி-திண்டுக்கல் இடையே மேற்கொள்ளப்படும் சாலை பணிகள் 3 பிரிவுகளாக நடைபெற்று வருகிறது.

தற்போது சாலை பணிகள் 80 சதவீதம் முடிவடைந்து உள்ளது. பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

அனுப்பர்பாளை யம், ஊஞ்சவேலாம்பட்டி, குரும்பபாளையத்தில் சுமார் 10 விவசாயிகள் ஆவணங்கள் கொடுக்காமல் இருந்தனர். இதனால் நிலம் கையகப்படுத்தும் பணி தாமதம் ஆனது.

தற்போது ஆவணங்கள் பெறப்பட்டதை தொடர்ந்து 660 மீட்டருக்கு நிலம் கையகப்படுத்தப்படுகிறது. கையகப்படுத்தும் பணிகள் முழுமையாக முடிந்த தும், சாலை அமைக்கும் பணி தொடங்கும். ஓராண்டிற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்