சித்ரா பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கோவிலில் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரம் ஆனது.
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கோவிலில் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரம் ஆனது.
அருணாசலேஸ்வரர் கோவில்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்வார்கள்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் போதும், சித்ரா பவுர்ணமியின் போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல வருகை தருவார்கள்.
சித்ரா பவுர்ணமி
இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி நேற்று முன்தினம் நள்ளிரவு 11.59 மணி அளவில் தொடங்கி நேற்று நள்ளிரவு 11.33 மணி அளவில் நிறைவடைந்தது. இதனால் நேற்று முன்தினம் இரவில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். நேற்று காலையில் பக்தர்கள் சாலையை அடைத்தபடி கிரிவலம் சென்றனர்.
கிரிவலப்பாதையில் காணும் இடமெல்லாம் பக்தர்கள் தலையாகவே காணப்பட்டது. வழிநெடுக தண்ணீர் மற்றும் மோர் வழங்கப்பட்டது. லாரியில் மோர் எடுத்து வந்து தண்ணீர் பந்தலில் உள்ள டிரம்களில் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
4 மணி நேரம்
மேலும் அன்னதானம் வழங்கும் இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அன்னதானம் வாங்கி சாப்பிட்டனர். அக்னி நட்சத்திரம் நேற்று முன்தினம் தொடங்கினாலும் நேற்று திருவண்ணாமலையில் மிதமான வெயிலே அடித்தது. இதனால் பகலில் கிரிவலம் சென்ற பக்தர்கள் எந்தவிதமான சிரமமின்றி சென்றனர்.
முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. 4 மணி முதல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கபட்டனர்.
கோவிலில் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் மேற்கொள்ள வரிசையின் நீளம் அதிகரிக்கப்பட்டு காணப்பட்டது. கோவிலில் கட்டணம் மற்றும் பொது தரிசனம் வழியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பொது வழி தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் ஆனதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
அமர்வு தரிசனம் ரத்து
கோவிலில் வரிசையில் வந்த பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் மோர் வழங்கப்பட்டது. சித்ரா பவுர்ணமியையொட்டி அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவிலின் பின்புறம் உள்ள மலை ஏறவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசல் மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த நகரையொட்டி வெளியே 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைத்து அங்கு பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் திருவண்ணாமலைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்ல 1,958 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் போக்குவரத்து, பொதுமக்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த 4 ஆயிரத்து 314 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மெட்டல் டிடெக்டர் கருவி
கோவிலில் பக்தர்கள் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டனர். கோபுர நுழைவு வாயில்களில் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்பட்டு பக்தர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
கோவில் முக்கிய பிரகாரங்கள், கிரிவலப்பாதையில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணித்தனர். கோவிலின் வளாகத்திற்குள் 3 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தது. கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் போலீஸ் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
108 ஆம்புலன்ஸ் வேன்கள் தயார் நிலையில் கிரிவலப்பாதையின் முக்கிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் மோட்டார் சைக்கிள் ஆம்புலன்சுகள் இயக்கப்பட்டன. திருவண்ணாமலை நகருக்கு வெளியூர் கார், வேன் போன்றவையும், ஆட்டோக்களும் இயக்க அனுமதிக்கப்பட வில்லை. கார், வேன் நிறுத்த தனியாக பார்க்கிங் வசதி செய்யப்பட்டு இருந்தது.
திருவண்ணாமலையில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றதால் கிரிவலப்பாதை மற்றும் கோவில் பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமாகவே காட்சியளித்தது. இதனால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டு இருந்தது.