கல்வராயன்மலை பகுதியில் தொடர்மழை:நீர்வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பும் ஏரி, குளங்கள் :விவசாயிகள் மகிழ்ச்சி
கல்வராயன்மலை பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால் ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மூங்கில்துறைப்பட்டு,
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழை கல்வராயன்மலை பகுதியிலும் நீடிக்கிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
மலைப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், அடிவாரத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீ்ர் வரத்து தொடங்கி உள்ளது. மேலும் மலையில் இருந்து வரும் முஷ்குந்தா ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் மூலம் புதூர், வடபொன்பரப்பி, லக்கி நாயக்கன்பட்டி, புளியங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைப் பகுதிகளான ஏரி, குளம் உள்ளிட்டவைகளுக்கு தண்ணீர் வர தொடங்கியுள்ளது. இதே போன்று பாக்கம், புதூர், கடுவனூர், கானாங்காடு உள்ளிட்ட ஏரிக்கு தண்ணீர் வர தொடங்கி உள்ளது. வறண்டு கிடந்த ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து இருக்கிறார்கள். அதே நேரத்தில் மலை அடிவாரத்தில் சில இடங்களில் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் இருக்கிறது. இதை விரைந்து தூர்வாரி தடையின்றி நீர்வரத்து ஏற்படுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.