மூலனூர் பகுதியில் 24 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, அப்பகுதியை சேர்ந்த பழனிசாமி (வயது 55) என்பவர் கடந்த 22-8-2020 அன்று வீட்டுக்குள் புகுந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து தாராபுரம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கோர்ட்டு ஜாமீனில் வெளியே வந்த பழனிசாமி, தொடர்ந்து கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதைத்தொடர்ந்து பழனிசாமி மீது ஜாமீனில் வெளியே வராதபடி பிடிவாரண்டு பிறந்து கோர்ட்டு உத்தரவிட்டது. பழனிசாமியை கைது செய்வதற்காக தாராபுரம் மகளிர் போலீஸ் நிலைய பெண் காவலர்கள் கற்பகம், கலைச்செல்வி ஆகியோர் நியமிக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அம்பிளிகை பஸ் நிலையத்தில், பழனிசாமியை 2 பேரும் கைது செய்தனர். பின்னர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் பழனிசாமியை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.
சிறப்பாக செயல்பட்ட தாராபுரம் மகளிர் காவலர்களை தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு பண வெகுமதி கொடுத்து பாராட்டினார்.