உடுமலை வனப்பகுதியில் இருந்து சிகிச்சைக்காக தொட்டில் கட்டி தூக்கி வந்த பெண் பலியானார். இதற்கு பாதை வசதி இ்ல்லாததே காரணம் என்று மலைவாழ் மக்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.
பெண் சாவு
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகப்பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஈசல்தட்டு மலைவாழ் குடியிருப்பைச் சேர்ந்த வெள்ளச்சி (வயது45) என்பவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக மலைவாழ் மக்கள் தொட்டில் கட்டி உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கொண்டு வந்தனர். அங்கு அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த சூழலில் வெள்ளச்சி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடலை ஈசல்தட்டு மலைவாழ் கிராமத்திற்கு எடுத்துச் சென்றனர்.
பாதை வசதி இல்லை
இது குறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில்"அடர்ந்த வனப்பகுதியில் வசித்து வருகின்ற மலைவாழ் மக்களுக்கு எந்த ஒரு தேவையும் எளிதில் பூர்த்தி செய்ய இயலாது. அவசர சிகிச்சை தேவைப்பட்டால் கூட உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வந்தடைய முடியாது. உடல்நலம் பாதித்த வெள்ளைச்சியை பெரும் இடர்பாடுகளுக்கு இடையில் தொட்டில் கட்டி சிகிச்சைக்காக தூக்கிக்கொண்டு வந்தோம். ஆனாலும் அவர் உயிரிழந்து விட்டார்.
உரிய பாதை வசதி இருந்திருந்தால் விரைவாக சிகிச்சைக்கு கொண்டு வந்திருக்க இயலும். காலதாமதம் ஏற்படுவதால் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகிறது. இதனால் நாள்தோறும் அச்சத்துடனே வாழ வேண்டிய சூழல் உள்ளது. எனவே மலைவாழ் கிராமங்களுக்கு பாதை வசதியை உடனடியாக ஏற்படுத்துவதற்கு அதிகாரிகள் முன் வர வேண்டும். இதனால் விலைமதிப்பற்ற உயிர் பறிபோவது தடுக்கப்படும்" என்றனர்.