உழவர் சந்தைகளுக்கு வரத்து அதிகரிப்பு: வெண்டைக்காய் கிலோ ரூ.8-க்கு விற்பனை
சேலத்தில் உழவர் சந்தைகளில் வரத்து அதிகரிப்பால் வெண்டைக்காய் கிலோ ரூ.8-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெண்டைக்காய் விலை வீழ்ச்சி
சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, சூரமங்கலம், தாதகாப்பட்டி, அம்மாபேட்டை உள்பட மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தக்காளி கிலோ ரூ.100-யை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது தக்காளி வரத்து அதிகரித்ததை தொடர்ந்து அதன் விலை வெகுவாக குறைந்தது. நேற்று உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.10 முதல் ரூ.14 வரை விற்பனையானது.
இந்த நிலையில், சேலம் செட்டிச்சாவடி, கன்னங்குறிச்சி, வீரபாண்டி, மேச்சேரி, தேவூர், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, வீராணம், பனமரத்துப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து உழவர் சந்தைகளுக்கு வெண்டைக்காயை விவசாயிகள் அதிகளவு கொண்டு வருகிறார்கள்.
இதனால் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக கடந்த வாரம் ஒரு கிலோ வெண்டைக்காய் கிலோ ரூ.15 வரை விற்பனையானது. தற்போது வெண்டைக்காய் விலை ரூ.8 முதல் ரூ.10 வரை விலை குறைந்து விற்கப்படுகிறது. வெளிச்சந்தைகளில் கிலோ ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது.
விவசாயிகள் கவலை
வெண்டைக்காய் விலை சரிவால் பொதுமக்கள் வெண்டைக்காயை அதிகளவு வாங்கி செல்கின்றனர். அதே நேரத்தில் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வேளாண்மை அதிகாரிகள் கூறும் போது, 'விளைச்சல் அதிகரிப்பு காரணமாக மாநகரில் உள்ள உழவர் சந்தைகளுக்கு தினமும் 7 டன் வரை வெண்டைக்காய் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. வரத்து அதிகரிப்பால் அதன் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் தக்காளி வரத்தும் அதிகரித்து உள்ளதால் அதன் விலையும் குறைந்துள்ளது. மேலும் பெரும்பாலான காய்கறிகளின் விலை குறைந்து உள்ளது' என்றனர்.