பூட்டிக்கிடந்த தாய்மார்கள் பாலூட்டும் அறை திறப்பு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் காந்திபுரம் டவுன் பஸ்நிலையத்தில் பூட்டிக்கிடந்த தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்பட்டது. இதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
'தினத்தந்தி' செய்தி எதிரொலியால் காந்திபுரம் டவுன் பஸ்நிலையத்தில் பூட்டிக்கிடந்த தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்பட்டது. இதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தாய்மார்கள் பாலூட்டும் அறை
கோவை மாவட்டத்தில் கோவை காந்திபுரம் மத்திய பஸ்நிலையம், டவுன் பஸ்நிலையம், அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்நிலையம், உக்கடம், மேட்டுப்பாளையம் சாலை பஸ்நிலையம், சிங்காநல்லூர் பஸ்நிலையம் மற்றும் கோவை ரெயில்நிலையம், பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம், சூலூர், சோமனூர் உள்ளிட்ட பஸ் நிலையங்களில் கடந்த 2015-ம் ஆண்டு தாய்ப்பால் ஊட்டும் அறைகள் திறக்கப்பட்டன. அங்கு தாய்மார்கள் சென்று குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து சென்று வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக கோவை காந்திபுரம் டவுன் பஸ்நிலையம் உள்பட ஒரு சில பஸ்நிலையங்களில் அமைக்கப்பட்டு இருந்த தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் முறையாக பராமரிக்கப்படாமலும், பயன்படுத்த முடியாமல் பூட்டிக்கிடந்தன. இதனால் வெளியூர் செல்வதற்காக இங்கு கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் அவதிக்குள்ளாகினார்கள்.
பெண்கள் மகிழ்ச்சி
இதுதொடர்பாக 'தினத்தந்தி'யில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கோவை காந்திபுரம் டவுன் பஸ்நிலையத்தில் பூட்டிக்கிடந்த தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறந்து அந்த அறையை தூய்மை பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்தனர். இதனால் பெண்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் கூறியதாவது:-
தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் கோவை காந்திபுரம் பஸ்நிலையத்தில் பூட்டிக்கிடந்த பாலூட்டும் தாய்மார்கள் அறை குறித்து தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியானது. அதை பார்த்ததும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்ததன்பேரில் தற்போது அந்த அறை திறக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு உள்ளது. இது பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை திறக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த தினத்தந்திக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றி.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.