ரேஷன் கடைகளில் ேகாதுமை தட்டுப்பாடு

ரேஷன் கடைகளில் ேகாதுமை தட்டுப்பாடு- முறையாக வழங்க பொதுமக்கள் வலியுறுத்தல்

Update: 2022-10-01 21:49 GMT

தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடை இன்றி நியாயமான விலையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு ரேஷன் கடைகளை உருவாக்கி அதன்மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்எண்ணெய், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. மேலும் பொங்கல் பண்டிகை காலத்தில் பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, சர்க்கரை, நெய், பருப்பு மற்றும் கரும்பு உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகிறது.

35 ஆயிரத்து 296 ரேஷன் கடைகள்

தமிழ்நாட்டில் மொத்தம் 2 கோடியே 19 லட்சத்து 64 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு 35 ஆயிரத்து 296 ரேஷன் கடைகள் மூலம் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகள் உணவு வழங்கல் துறை, கூட்டுறவு துறை, மகளிர் குழுக்கள் ஆகியவை மூலமாக நடத்தப்பட்டு வருகின்றன. ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில், ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் 4 அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவை அமைத்து அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த கண்காணிப்பு குழுவில் ஒருங்கிணைப்பாளராக மாவட்ட வழங்கல் அலுவலரும், உறுப்பினர்களாக நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர், கூட்டுறவு துறை மண்டல இணைப்பதிவாளர், குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் ஆகியோரும் உள்ளனர்.

கோதுமை தட்டுப்பாடு

இந்த ரேஷன் கடைகளில் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. 20 கிலோ அரிசி வாங்கக்கூடியவர்களுக்கு 4 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. சில கடைகளில் 10 கிலோ கோதுமை வழங்கப்படுகிறது. சீனி, பாமாயில், பருப்பு வகைகள், மண்எண்ணெய் ஆகியவை அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அரிசி, மண்எண்ணெய், கோதுமை உள்ளிட்டவை மத்திய அரசின் ஒதுக்கீட்டின் மூலம் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டு தமிழக அரசு மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது பெரும்பாலான இடங்களில் கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல ரேஷன் கடைகளில் கோதுமை வழங்கப்படவில்லை. சில கடைகளில் குறைந்த அளவில் கோதுமை வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, முதியவர்கள், நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கோதுமையில் சப்பாத்தி, ரொட்டி தயாரித்து சாப்பிட்டு வருகிறார்கள். அவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

பொதுமக்கள் கோரிக்கை

நெல்லை மாவட்டத்திலும் பெரும்பாலான இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் கோதுமை கிடைப்பது இல்லை. குறிப்பாக நெல்லை மாநகர பகுதியில் உள்ள கடைகளில் கோதுமை வழங்கப்படுவது இல்லை. இதனால் பொதுமக்கள் அதிக விலை கொடுத்து வெளிமார்க்கெட்டில் கோதுமை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே, தங்களுக்கு ரேஷன் கடைகளில் முறையாக கோதுமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நெல்லை கரம்பையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் கூறுகையில், 'நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக ரேஷன் கடைகளில் கோதுமை வழங்குவது படிப்படியாக குறைக்கப்பட்டது. முதலில் 20 கிலோ அரிசி வாங்குபவர்களுக்கு 10 கிலோ கோதுமை கேட்டால் கொடுப்பார்கள். பின்னர் அது 4 கிலோவாக குறைந்தது. தற்போது கோதுமை இல்லை என்று கூறுகிறார்கள். இந்த நிலை மாறி கோதுமை தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும்' என்றார்.

நடவடிக்கை

செல்லத்துரை என்பவர் கூறுகையில், 'தற்போது வயதானவர்களில் பெரும்பாலானோர் நீரிழிவு நோய், ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நீரிழிவு நோய் பாதித்தவர்கள் இரவில் கண்டிப்பாக கோதுமை சப்பாத்தி தான் சாப்பிட வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுரை வழங்குகின்றனர். இதனால் பெரும்பாலானோர் ரேஷன் கடைகளில் கோதுமை கேட்கிறார்கள். அவர்களுக்கு தேவையான கோதுமையை வழங்க வேண்டும். ஆனால், தற்போது கோதுமை தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, ரேஷன் கடைகளில் தொடர்ந்து முைறயாக கோதுமை வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்