அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தொழிலாளர்கள், சம்பளநிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தொழிலாளர்கள், சம்பளநிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

Update: 2022-12-12 11:15 GMT

உடுமலை,

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைத்தொழிலாளர்கள், சம்பளநிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

அமராவதி கூட்டுறவுசர்க்கரை ஆலை

உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாதகாலத்தை கரும்பு அரவைப்பருவமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இந்த ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சில ஆண்டுகளாக அந்தந்த மாதத்தில் சம்பளம் வழங்கப்படுவதில்லை. 3, 4 மாதங்கள் கழித்து ஓரிரு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. அதற்குள் அடுத்த மாதங்களுக்கான சம்பளம் நிலுவையில் சேர்ந்து கொள்கிறது. இவ்வாறு உள்ள நிலுவைத்தொகையை வழங்கக்கோரி தொழிலாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆலைக்கு கரும்பு வழங்கிய ஆலை அங்கத்தினர்களுக்கான கரும்பு கிரையத்தொகை நிலுவையின்றி வழங்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு வழங்குவதற்காக தமிழக அரசிடமிருந்து, ஆலை நிர்வாகம் ரூ.15 கோடியே 75 லட்சம் வழிவகைக் கடனாக வாங்கி, கரும்பு விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய கரும்பு கிரையத்தொகையை நிலுவையின்றி வழங்கியது.

சம்பளம் நிலுவை

இந்த ஆலையில் அடுத்தஆண்டு (2023) அரவைப்பருவத்திற்காக இதுவரை 1,800 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் 2022-2023-ம் ஆண்டு அரவைப்பருவத்திற்கு ஆலையில் உள்ள எந்திரங்களை தயார்படுத்துவதற்காக சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆலையின் சார்பு நிறுவனமான வடிப்பாலையில் (எரிசாராய ஆலை) எரிசாராயம் உற்பத்தி நடைபெற்று வருகிறது. சர்க்கரை ஆலை மற்றும் வடிப்பாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 4மாத சம்பளம் வழங்கப்படாமல் நிலுவை உள்ளது. அதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள்தெரிவித்துள்ளனர். அதனால் சம்பள நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கும்படி வலியுறுத்தி வருகின்றனர்.

தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து மாதம்தோறும் பிடித்தம்செய்யப்பட்டுவரும் பி.எப்.தொகை கடந்த 25மாதங்களாக பி.எப். அலுவலகத்திற்கு செலுத்தப்படாமல் உள்ளது. இந்த தொகையை ஆலைநிர்வாகம், பி.எப். அலுவலகத்திற்கு செலுத்தினால்தான், ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு மாத ஓய்வுதியம் (பென்சன்) வரும். ஆனால் ஆலையில் இருந்து பி.எப். அலுவலகத்திற்கு செலுத்தவேண்டிய தொகையை ஆலை நிர்வாகம் செலுத்தாமல் நிலுவை வைத்திருப்பதால், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி ஓய்வு பெற்று ஒரு ஆண்டுக்கு மேலாகியும் அவர்களுக்கு ஓய்வூதியம் வராமல் உள்ளது. அதனால் சம்பளத்தில் இருந்து மாதம்தோறும் பிடித்தம் செய்யப்பட்ட பி.எப். தொகையை பி.எப்.அலுவலகத்திற்கு செலுத்தவேண்டும் என்று தொழிலாளர்கள், தொடர்ந்து ஆலைநிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர் வேலை நிறுத்தம்

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து வேலைநிறுத்தம் நடைபெறும் என்று ஆலையின் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதன்படி நேற்று வேலைநிறுத்தம் தொடங்கியது. சர்க்கரை ஆலை மற்றும் வடிப்பாலையில் தற்போது நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் மொத்தம் 396 பேர் பணியில் உள்ளனர். (இதில் தற்காலிக தொழிலாளர்கள் 293பேர்) நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்கள், ஊழியர்கள்அனைவரும் வேலைக்கு செல்லாமல் ஆலையின் அலுவலகம் முன்பு தார்பாய் விரித்து உட்கார்ந்திருந்தனர். இவர்கள் வேலைக்கு செல்லாததால் சர்க்கரை ஆலையில் எந்திரங்களை சுத்திகரிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வடிப்பாலையில் எரிசாராயம் உற்பத்தி மற்றும் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்