தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி படுகொலை

தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி படுகொலை

Update: 2023-07-13 14:19 GMT

தளி

உடுமலை அருகே தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தொழிலாளி கொலை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பூலாங்கிணரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 77). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு முக்கோணம் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தின் முன்பு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இது குறித்து உடுமலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாரன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

அப்போது அங்கு பிணமாக கிடந்த சுப்பிரமணியன் தலை அருகே ஹாலோ பிளாக் கல் கிடந்தது. மர்ம ஆசாமிகள் அவரின் தலையில் ஹாேலா பிளாக் கல்லை போட்டு கொன்று விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்பநாய் சுப்பிரமணி உடல் கிடந்த இடத்தில் இருந்து ேமாப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. மேலும் தடவியல் மற்றும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

போலீசார் விசாரணை

பின்னர் சுப்பிரமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்