சிகரெட்டால் மனைவிக்கு சூடு வைத்த தொழிலாளி கைது
உளுந்தூர்பேட்டை அருகே சிகரெட்டால் மனைவிக்கு சூடு வைத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார். சூடு வைத்ததை தட்டிக்கேட்ட மைத்துனருக்கும் கத்திக்குத்து விழுந்தது
உளுந்தூர்பேட்டை
மதுபோதையில் தாக்குதல்
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அஜீஸ் நகரை சேர்ந்தவர் குமார் மகன் நடராஜ்(வயது 28). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பாண்டிய வர்த்தினி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மது பழக்கம் உடைய நடராஜ், தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து அவரது மனைவியை ஆபாச வார்த்தைகளால் திட்டி, தாக்கி வந்ததாக கூறப்படுகிறது.
மனைவிக்கு சூடு வைத்தார்
இந்த நிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த நடராஜ், தான் புகைத்த சிகரெட்டால் பாண்டியவர்த்தினிக்கு சூடு வைத்ததாக தெரிகிறது. இதில் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த அவர், தனது தாய் வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி அழுதார்.
இதையடுத்து அவரது அண்ணன் விஷ்ணு பாண்டியன்(27), நடராஜன் வீட்டிற்கு சென்று அவரிடம் தட்டிக்கேட்டார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
மைத்துனருக்கு கத்திக்குத்து
இதில் ஆத்திரம் அடைந்த நடராஜ் தன்னிடம் இருந்த கத்தியால் விஷ்ணு பாண்டியனை குத்தினார். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு விஷ்ணுபாண்டியன் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாாின் பேரில் நடராஜ் மீது எடைக்கல் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.