கூலித்தொழிலாளி கல்லால் தாக்கி கொலை

பொள்ளாச்சி அருகே தாய் குறித்து தவறாக பேசியதால் கூலித்தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-28 20:00 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே தாய் குறித்து தவறாக பேசியதால் கூலித்தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கூலித்தொழிலாளி

பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் கோட்டாம்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(வயது 30). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து சென்று விட்டார். மேலும் பெற்றோரும் இல்லாததால் ரஞ்சித்குமார் தனியாக வசித்து வந்தார்.

கல்லால் தாக்கி...

இந்த நிலையில் அவர், தனது உறவினரான டிரைவர் கோபாலகிருஷ்ணன்(38) என்பவருடன் அடிக்கடி மது குடிக்க செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவில் அவர்கள் 2 பேரும், கோபாலகிருஷ்ணனின் வீட்டில் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். போதை தலைக்கேறியதும், கோபாலகிருஷ்ணனின் தாயை ரஞ்சித்குமார் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில் ஆத்திரம் அடைந்த கோபாலகிருஷ்ணன் கீழே கிடந்த கல்லை எடுத்து ரஞ்சித்குமாரின் தலையில் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கைது

இந்த சம்பவம் குறித்து கோட்டூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து, ரஞ்சித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்