சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது
விழுப்புரம்
சிறுமி பலாத்காரம்
திண்டிவனம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி 9-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 1.1.2017 அன்று அந்த சிறுமி, அப்பகுதியில் உள்ள ஒரு துணிக்கடைக்கு சென்று விட்டு வருவதாக பெற்றோரிடம் கூறிச்சென்றார்.
அந்த சமயத்தில் அந்த சிறுமியை திண்டிவனம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த மணி மகனான கூலித்தொழிலாளி சுபாஷ்(23) என்பவர் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
இதையறிந்ததும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இதுபற்றி ரோஷணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் சுபாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட சுபாசுக்கு சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கடத்திச்சென்ற குற்றத்திற்காக 3 ஆண்டு சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். ஏக காலம் என்பதால் சுபாஷ், 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட சுபாஷ், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலா ஆஜரானார்.