லாரி மோதி தொழிலாளி பலி

காட்டுமன்னார்கோவில் அருகே லாரி மோதி தொழிலாளி பலியானார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 4 லாரிகளின் கண்ணாடிகளை உடைத்து, மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-08-16 19:17 GMT

காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் அருகே குருங்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 32). தொழிலாளி. இவர் நேற்று மதியம் தனது மோட்டார் சைக்கிளில் அவரது தாய் விஜயலட்சுமியை அழைத்துக் கொண்டு திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கண்டமங்கலம் மெயின்ரோட்டுக்கு சென்றார்.

அங்கு இருந்த ஒரு கடையில் அவரது தாயை இறக்கி விட்டு, ஆனந்தராஜ் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் திருச்சி- சிதம்பரம் புதிய கிராம சாலைகள் அமைப்பதற்காக பொருட்களை இறக்கி விட்டு காலியாக வந்த லாரி ஆனந்தராஜ் மீது மோதியது.

பலி

இந்த விபத்தில் அவர் ரோட்டோரம் தூக்கி வீசப்பட்டார். அந்த நேரத்தில் கடையில் பொருட்கள் வாங்கி விட்டு அவரது தாயும் வந்தார். அப்போது அவர் கண் எதிரே ஆனந்தராஜ் ரத்த வெள்ளத்தால் உயிரிழந்தார்.

இது பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள், ஆனந்தராஜ் உறவினர்கள் அந்த பகுதியில் ஒன்று கூடினர். பின்னர் அவர்கள் தனியார் ஒப்பந்ததாரர் வாகனங்கள் அடிக்கடி விபத்தை ஏற்படுத்தி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்டமங்கலம் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

கண்ணாடி உடைப்பு

சிலர் விபத்தை ஏற்படுத்திய லாரி கண்ணாடியை அடித்து உடைத்தனர். அந்த நேரத்தில் வந்த தனியார் ஒப்பந்ததாரரின் மேலும் 3 லாரிகளின் கண்ணாடிகளையும் ஆத்திரத்தில் அடித்து உடைத்தனர்.

இதற்கிடையில் சம்பவம் பற்றி அறிந்ததும் சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார், காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பரபரப்பு

அப்போது விபத்து தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதையடுத்து ஆனந்தராஜ் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார் கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது பற்றி ஆனந்தராஜின் அண்ணன் அருண்ராஜா காட்டு மன்னார்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனந்தராஜ் திருமணம் ஆகாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்