வத்தலக்குண்டு அருகே தென்னை மரம் சாய்ந்து தொழிலாளி பலி
வத்தலக்குண்டு அருகே தென்னை மரம் சாய்ந்து தொழிலாளி பலியானார்.
வத்தலக்குண்டு அருகே உள்ள கணவாய்ப்பட்டி ஆசிரமம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 41). தென்னை மரம் ஏறும் தொழிலாளி. இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை பெருமாள் வழக்கம்போல் பக்கத்து கிராமமான ஜி.தும்மலப்பட்டியில் உள்ள தனியார் தோட்டத்தில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் வெட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஒரு மரத்தை விட்டு இறங்கி, மற்றொரு மரத்தில் ஏறினார். மரத்தில் பாதி தூரம் ஏறிய நிலையில், திடீரென்று அந்த தென்னை மரம் சாய்ந்தது. அப்போது மரத்துடன் சேர்ந்து பெருமாளும் தரையில் விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பெருமாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.