முதியவரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

மது குடிக்காதே என்று அறிவுரை கூறிய முதியவரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2023-01-31 19:00 GMT

முதியவர் கொலை

தேனி சமதர்மபுரம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெத்துராஜ் (வயது 83). இவர், அதே பகுதியை சேர்ந்த சிவகண்ணாமூர்த்தி என்பவருடைய வீட்டு மாடியில் உள்ள அறையை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். வீட்டு உரிமையாளர் சிவகண்ணா மூர்த்தியின் தம்பி கனகவேல் அய்யப்பன் (33) என்பவரும் அதே அறையில் தங்கி இருந்தார். கனகவேல் அய்யப்பன் கூலிவேலை செய்து வந்தார். அவருக்கு மது பழக்கம் இருந்தது. அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந்தேதி இரவு கனகவேல் அய்யப்பனிடம், மது குடிப்பதை நிறுத்தி விட்டு, நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள்ளுமாறு பெத்துராஜ் அறிவுரை கூறினார். அதை அவர் ஏற்றுக் கொள்ளாமல் அவருடன் தகராறு செய்தார்.

பின்னர் பெத்துராஜ் தூங்கி விட்டார். ஆனால், தூங்கிக் கொண்டு இருந்த அவரை எழுப்பி மீண்டும் அவருடன் கனகவேல் அய்யப்பன் தகராறு செய்தார். அப்போது ஒரு இரும்பு கம்பியால் பெத்துராஜை அவர் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் பலியானார்.

ஆயுள் தண்டனை

இந்த சம்பவம் குறித்து பெத்துராஜின் மகள் சாந்தா தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகவேல் அய்யப்பனை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் பாஸ்கரன் ஆஜராகி வாதாடினார்.

வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி சஞ்சய் பாபா நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் கனகவேல் அய்யப்பனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து கனகவேல் அய்யப்பனை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்