பூட்டிய வீட்டில் தொழிலாளி பிணம்
திருவட்டார் அருகே பூட்டிய வீட்டில் தொழிலாளி பிணம்
திருவட்டார்
திருவட்டார் அருகே உள்ள செங்கோடி வருக்கப்பிலா விளையை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ். இவருக்கு ராபின்சன், எட்வின் ஜெயக்குமார் (வயது52) என்ற 2 மகன்களும், இரண்டு மகள்களும் உண்டு. தொழிலாளியான எட்வின் ஜெயக்குமாருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் பூவன்கோடு அருகில் இலுப்பமூட்டில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு சர்க்கரை நோய் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு எட்வின் ஜெயக்குமார் தங்கியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் ராபின்சனிடம் தகவல் தெரிவித்தனர். அவர் அங்கு சென்று வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அறையில் எட்வின் ஜெயக்குமார் இறந்து அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்கபெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு ெசன்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து எட்வின் ஜெயகுமார் நோயால் இறந்தாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.