2 பெண்கள் கொலை வழக்கில் தொழிலாளி கைது
2 பெண்கள் கொலை வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்:
2 பெண்கள் கொலை
அரியலூர் மாவட்டம் பெரியவளையம் கிராமத்தை சேர்ந்த கலைமணியின் மனைவி மலர்விழி(வயது 29). இவரும், அதே பகுதியை சேர்ந்த தண்டபாணியின் மனைவி கண்ணகியும்(40) கடந்த 22-ந் தேதி சமையலுக்கு காளான் பறிப்பதற்காக அருகில் உள்ள வயல்வெளிக்கு சைக்கிளில் சென்றனர். அவர்கள் சைக்கிளை கழுவந்தோண்டி செல்லும் சாலையில் நிறுத்திவிட்டு, வயல் பகுதிக்கு சென்று காளான் பறித்துள்ளனர்.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டிற்கு திரும்பாததால் சந்தேகமடைந்த கலைமணி மற்றும் அப்பகுதி இளைஞர்கள் வயல்வெளியில் தேடியுள்ளனர். அப்போது மலர்விழியும், கண்ணகியும் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நகைக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.
உடல்கள் ஒப்படைப்பு
இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன் ஆலோசனையின்படி ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் நேற்று முன்தினம் மலர்விழி மற்றும் கண்ணகி ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில், சூர்கத்தி (அரிவாள்), சுளுக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி, அரிவாளால் வெட்டப்பட்டும், 2 பேரின் கழுத்துப் பகுதியில் சுளுக்கியால் குத்தப்பட்டும் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்ததாக போலீசாரால் கூறப்படுகிறது.
திடுக்கிடும் தகவல்
மேலும், கண்ணகியின் செல்போனை காணாததால், அவர் செல்போன் மூலம் யார்? யாரிடம் பேசினார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சம்பவம் நடந்த பகுதியில் இருந்து கண்ணகி முதலாவதாக அவரது மகன் விக்னேஸ்வரனுக்கும், இரண்டாவதாக தனது கொழுந்தனாரின் மனைவி செல்விக்கும் போன் செய்ததும், அவர்கள் போனை எடுக்காததால், தனது அண்ணன் மகனுக்கு போன் செய்ததும் தெரியவந்தது. அவரது அண்ணன் மகன் போனை எடுத்து பேசியபோது கண்ணகி பேசியது ஒன்றும் புரியாததால் இணைப்பை துண்டித்துவிட்டு மீண்டும் போன் செய்தபோது, கண்ணகியின் செல்போன் சுவிட்ச் ஆப் ெசய்யப்பட்டிருந்ததும், போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதுபோன்று திடுக்கிடும் தகவல் வெளியானதால் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
வேட்டைக்கு சென்றவர்களிடம் விசாரணை
ேமலும் அப்பகுதியில் சுளுக்கி வைத்து வேட்டையாடுபவர்கள் யார்? என்பது பற்றி துருவித்துருவி விசாரணை நடத்தினர். இதில், கழுவந்தோண்டியை சேர்ந்த பால்ராஜ்(40) என்பவர்தான் முயல் வேட்டைக்கு செல்வது வழக்கம் என்பது தெரியவந்தது.
அதில் இருந்து நூல் பிடித்தவாறு விசாரணையை தொடங்கிய போலீசார், இந்த சம்பவம் நடந்த பகுதி வழியாக முயல் வேட்டைக்கு சென்றவர்களையும், கழுவந்தோண்டி பகுதியை சேர்ந்தவர்கள் உள்பட மேலும் சிலரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். குறிப்பாக பால்ராஜிடம் தொடர்ந்து 2 நாட்களாக விசாரணை நடத்தினர். இதில் 2 பெண்களையும் கொலை செய்தது பால்ராஜ்தான் என்பது தெரியவந்தது.
வாக்குமூலம்
மேலும் பால்ராஜ் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது;-
தொழிலாளியான பால்ராஜ் முயல் போன்றவற்றை வேட்டையாட செல்வது வழக்கம். அதன்படி சம்பவம் நடந்த கடந்த 22-ந் தேதி பால்ராஜ் அப்பகுதிக்கு வேட்டைக்கு சென்றுள்ளார். அப்போது வயல்பகுதியில் சிறிது தூர இடைெவளியில் கண்ணகியும், மலர்விழியும் காளான் பறித்துள்ளனர். இதில் மலர்விழி கழுத்தில் தங்க நகை கிடந்ததை கவனித்த பால்ராஜிக்கு, அதனை அபகரிக்கும் விபரீத எண்ணம் தோன்றியுள்ளது. இதையடுத்து மலர்விழியிடம் இருந்து நகையை பறிக்க முயன்றுள்ளார்.
அப்போது மலர்விழி சத்தம்போட்டதால் ஆத்திரமடைந்த பால்ராஜ் தான் வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டியதோடு, சுளுக்கியால் மலர்விழியின் தொடை மற்றும் முகத்தில் குத்தியுள்ளார். பின்னர் அவரை கீழே தள்ளி, அவரது கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறித்துள்ளார். இதில் மலர்விழி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
மோட்டார் சைக்கிளில் சுற்றினார்
சத்தம் கேட்டு கண்ணகி அங்கு வந்தபோது, மலர்விழி கொலை செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளார். மேலும் இது பற்றி தெரிவிக்க தனது செல்போன் மூலம் உறவினர்களுக்கு போன் செய்துள்ளார். இதைக்கண்ட பால்ராஜ், இந்த சம்பவம் பற்றி கண்ணகி வெளியே கூறினால் தான் மாட்டிக்கொள்வோமே? என்ற பதற்றமடைந்துள்ளார்.
இதையடுத்து கண்ணகியையும் சுளுக்கியால் தொண்டையிலும், தொடையிலும் குத்தி, தலையில் தாக்கி, அரிவாளால் வெட்டி ெகாலை செய்துள்ளார். பின்னர் கண்ணகியின் செல்போனை கைப்பற்றிய பால்ராஜ் அதில் இருந்து பேட்டரி, செல்போன், சிம் கார்டு என தனித்தனியாக பிரித்து ஏரியில் வீசியுள்ளார். பின்னர் போலீசாரிடம் சிக்காமல் இருக்க வீட்டிற்கு செல்லாமல் தனது மோட்டார் சைக்கிளிலேயே அப்பகுதியில் அவர் சுற்றி வந்துள்ளார். இருப்பினும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி தன்னை பிடித்துவிட்டனர், என்று அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
கைது
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 2 பெண்களையும் அவர் மட்டும் தனியாக கொலை செய்தாரா? அல்லது வேறு யாருக்கேனும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் 2 பெண்களையும் கொலை செய்தது எப்படி? என்பதை செய்து காட்டினார்.
மேலும் பால்ராஜ் தனது துருப்பிடித்த துப்பாக்கியை அப்பகுதியில் உள்ள ஏரியில் தூக்கி வீசியதாக கூறினார். இதையடுத்து ஏரியில் இருந்து அந்த துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர். சிறிது தூரத்தில் பால்ராஜ் சுட்டிக்காட்டிய இடத்தில் இருந்து சுளுக்கி மற்றும் அரிவாள்களை போலீசார் கைப்பற்றினர். பால்ராஜிடம் இருந்து மலர்விழியின் தாலிச்சங்கிலியும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதி தொடர்ந்து பரபரப்பாக காணப்படுகிறது.
செல்போனால் சிக்கினார்
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பால்ராஜ், தன்னுடைய செல்போனால்தான், தான் மாட்டிக் கொண்டேன் என்று மனம் நொந்தபடி போலீசாரிடம் தெரிவித்ததாக போலீசார் கூறினர். ஏனெனில் பால்ராஜ் வீட்டில் இல்லாத நிலையில் அவரது செல்போன் டவர் சிக்னலை வைத்துதான், அவர் எங்கெங்கு செல்கிறார் என்று போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் கொலை சம்பவம் நடந்த நேரத்தில் அவரது செல்போன் சிக்னல் அப்பகுதியை காட்டியதும் போலீசாருக்கு தெரியவந்தது. ஆனால் பால்ராஜ் சாமர்த்தியமாக தப்பித்து விடலாம் என்று எண்ணி போலீசாரிடம் உண்மைகளை மறைத்து பதில் கூறியுள்ளார். இருப்பினும் அவரிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது அவர்தான் என்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.