தனியார் நிறுவனங்களில் 1 லட்சம் பேருக்கு வேலை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் பேட்டி
தமிழகத்தில் இதுவரை 66 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு தனியார் நிறுவனங்களில் 1 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் கூறினார்.
தமிழகத்தில் இதுவரை 66 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு தனியார் நிறுவனங்களில் 1 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து வருகிற 5-ந் தேதி மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. திருச்சி சேஷசாயி தொழில்நுட்ப பயிலகத்தின் (எஸ்.ஐ.டி.) கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட உள்ள இந்த முகாமிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வே.கணேசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேலைவாய்ப்பு முகாம்
தமிழ்நாட்டில் இதுவரை 66 இடங்களில் மெகா வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி 1 லட்சத்து 4 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் தொழில்நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது. கடந்த மாதம் 15-ந் தேதி சென்னையில் நடந்த விழாவில் 1 லட்சமாவது பணிநியமன ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். வருகிற 5-ந் தேதி திருச்சி எஸ்.ஐ.டி. கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி குறைந்தபட்சம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்று தரப்படும்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இதுபோல் வேலைவாய்ப்பு முகாம் நடத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆண்டுக்கு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை முதல்-அமைச்சர் பெற்று தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒட்டு மொத்தமாக தமிழக வரலாற்றில் 93.79 சதவீதம் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. குறிப்பாக 51 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 100-க்கு 100 சதவீதம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நலத்திட்டங்கள்
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றபிறகு, அமைப்புசாரா தொழிலாளர்கள் வாரியங்களில் ஆய்வு செய்ததில், ஒரு லட்சத்து 7 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்படாமல் இருந்தது. அதை ஆய்வு செய்து, சென்னையில் ஒரேநாளில் 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இதுவரை 4¼ லட்சம் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்-அமைச்சர் வழங்கி இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக திருச்சியில் நடைபெற உள்ள தனியார் வேலை வாய்ப்பு முகாம் தொடர்பாக விழிப்புணர்வு பிரசார வாகனத்தை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வே.கணேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கூட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ், தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் (வேலைவாய்ப்பு) சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.