விழுப்புரத்தில் ரூ.3¾ கோடியில் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் அமைச்சர் பொன்முடி அடிக்கல் நாட்டினார்

விழுப்புரத்தில் ரூ.3¾ கோடியில் கட்டப்பட உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் பொன்முடி அடிக்கல் நாட்டினார்.

Update: 2023-06-23 18:45 GMT

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட சாலாமேட்டில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் ரூ.3.72 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலகம் கட்டப்பட உள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நா.புகழேந்தி, டாக்டர் இரா.லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொழிலாளர் நலத்துறை அலுவலக கட்டிட பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், இந்த அலுவலகம் அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்படவுள்ளது. கட்டுமானப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு கட்டிடம் அலுவலக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி வகுத்த வழியில் நல்லாட்சி புரிந்துவரும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தொழிலாளர்களையும், தொழிலாளர்கள் சார்ந்த குடும்ப உறுப்பினர்களையும் காத்து வருகிறார். தொழிலாளர் நலத்துறையின் முக்கிய நோக்கம், கட்டுமான தொழிலாளர் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்களின் நலனை பேணிக்காப்பதே ஆகும். அதனடிப்படையில் இத்துறையின் மூலம் தொழிலாளர்களுக்கு நலவாரியங்கள் மூலமாக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி தொழிலாளர்களை காத்து வருகிறது என்றார்.

இவ்விழாவில் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, துணைத்தலைவர் சித்திக்அலி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) பரிதி, உதவி செயற்பொறியாளர் விஜயா, உதவி பொறியாளர் பாலாஜி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஆனந்தன், உதவி ஆய்வாளர் நூருல்லா, 39-வது வார்டு நகரமன்ற கவுன்சிலர் புருஷோத்தமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்