ஆய்வக உதவியாளர் போக்சோ சட்டத்தில் கைது
மாணவிகளிடம் தவறாக நடந்த குன்னத்தூர் அரசு மேல்நிலை பள்ளி ஆய்வக உதவியாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆரணி
மாணவிகளிடம் தவறாக நடந்த குன்னத்தூர் அரசு மேல்நிலை பள்ளி ஆய்வக உதவியாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆய்வக உதவியாளர்
ஆரணியை அடுத்த குன்னத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வருபவர் கோவிந்தசாமி (வயது 60). நேற்று ஆய்வக அறையிலும், நூலகத்திற்கும் வந்திருந்த மாணவிகளிடம் அவர் மடியில் அமரும்படி கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்தனர். அதன்பேரில் இன்று காலை பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, தலைமை ஆசிரியை நந்தினியிடம் கூச்சலிட்டனர்.
தலைமை ஆசிரியை அவருக்கு விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
போக்சோவில் கைது
அதனைத்தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர் ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் மற்றும் போலீசார் சோமந்தாங்கல் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று கோவிந்தசாமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்தது உறுதி செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராணி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கோவிந்தசாமியை கைது செய்தனர்.
பின்னர் அவரை ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கோவிந்தசாமி இன்னும் 2 மாதத்தில் பணி ஓய்வு பெற உள்ளார்.
இவர் இப்பள்ளியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் வேலை செய்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.